/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
அச்சுறுத்தும் புயலை எதிர்கொள்ள உச்சகட்ட உஷார் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
/
அச்சுறுத்தும் புயலை எதிர்கொள்ள உச்சகட்ட உஷார் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
அச்சுறுத்தும் புயலை எதிர்கொள்ள உச்சகட்ட உஷார் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
அச்சுறுத்தும் புயலை எதிர்கொள்ள உச்சகட்ட உஷார் ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடல்
ADDED : நவ 30, 2024 02:04 AM

இன்று கரைகடக்க உள்ள புயல், மழை பாதிப்புகளை தடுக்கும் வகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்துறை அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளனர். அச்சுறுத்தல் ஏற்படுத்தி வரும் விளம்பர பதாகைகள், கடைகளின் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
சென்னையின் பிரதான சாலைகளான ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகள் மூடப்பட்டு உள்ளன. பூங்கா மற்றும் கடற்கரை பகுதிகள் மூடப்பட்டு, பொதுமக்கள் வருகை தடை செய்யப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்றுடன் மிதமான தொடர் மழை பெய்து வருகிறது.
இன்று, 90 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்றும், 20 செ.மீ.,க்கும் அதிகமாக கன மழை பெய்யக்கூடும் என, ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
புயல், மழை பாதிப்புகளை தடுக்க, பல்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். குறிப்பாக, பலத்த காற்று வீசும் என்பதால், சென்னை முழுதும் அச்சுறுத்தி வரும் விளம்பர பதாகைகள், அதை தாங்கும் சட்டகம், கடைகளின் பெயர் பலகைகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அனுமதி பெற்றும், அனுமதியின்றியும் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான விளம்பர பதாகைகளை, நேற்று காலை முதல் ரோந்து பணிக்கும் செல்லும் அந்தந்த பகுதி போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மழை பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மண்டல அதிகாரிகள், மீட்பு பணிக்கான உபகரணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்.மழைநீரை வடியவைக்க மோட்டார், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்டவை, அந்தந்த பகுதிகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்களில், பிரட், பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்கள் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டது.
'புயல், அதிக கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்' என, மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
சென்னைக்கு மழை இருக்கும் என அறிவித்து உள்ளனர். புயல், கனமழை வந்தாலும், அதை எதிர் கொள்ள தயாராக இருக்கிறோம்.
கடந்த அக்., மாதமே, 100 குதிரை திறன் உடைய 110 மோட்டார்கள் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது தாழ்வான பகுதிகளில் கூடுதலாக, 60 மோட்டார்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் கூடுதலாக கவனித்து வருகிறோம்.
அனைத்து கால்வாய்களிலும் துார்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. ஆகாயத்தாமரை மற்றும் இதர குப்பையை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மழைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறோம்.
மாநகராட்சியில், மழை தடுப்பு பணியில் வார்டுக்கு 10 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உணவு வினியோகம், மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவர்.
மேலும், தன்னார்வலர்கள் பலர் மாநகராட்சியுடன் இணைந்துள்ளனர். அவர்களும் மழை வெள்ள பாதிப்பு தடுப்பு பணியில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.