ADDED : செப் 28, 2025 12:44 AM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்தில் புதிதாக கட்டிய அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு பொது கட்டடங்கள் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டன.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பழையசீவரம், தொள்ளாழி, ஊத்துக்காடு, அகரம், வள்ளுவப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அங்கன்வாடி மையம் பழுதான கட்டடங்களில் இயங்கி வந்தது.
அக்கட்டடங்களுக்கு மாற்றாக புதிய கட்டட வசதி ஏற்படுத்த கோரிக்கை எழுந்தது.
அதன்படி, அப்பகுதிகளில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
அப்பணிகள் முழுமையாக நிறைவு பெற்றதையடுத்து உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் நேற்று முன்தினம் திறந்து வைத்தார்.
இதேபோன்று, கிதிரிப்பேட்டை, திம்மையன்பேட்டை, நாய்க்கன்குப்பம், வில்லிவலம் ஆகிய பகுதிகளில் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கான புதிய கட்டடம் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடந்தது.
வில்லிவலம் மற்றும் பூசிவாக்கம் கிராமத்தில் நுாலகத்திற்காக கட்டிய புதிய கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு விடப்பட்டன.
நிகழ்ச்சியில், வாலாஜாபாத் ஒன்றியக் குழு தலைவர் தேவேந்திரன், துணை தலைவர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.