sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கல் குவாரிகள் அமைக்க...எதிர்ப்பு!

/

உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கல் குவாரிகள் அமைக்க...எதிர்ப்பு!

உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கல் குவாரிகள் அமைக்க...எதிர்ப்பு!

உத்திரமேரூர் ஒன்றியத்தில் புதிய கல் குவாரிகள் அமைக்க...எதிர்ப்பு!


ADDED : நவ 21, 2024 11:35 PM

Google News

ADDED : நவ 21, 2024 11:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்தில், புதிதாக மூன்று கல் குவாரிகள் அமைப்பது தொடர்பாக, கனிம வளத் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் நேற்று நடத்திய கருத்து கேட்பு கூட்டத்தில், கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'கடந்தாண்டு நான்கு புதிய குவாரிகள் துவங்கிய நிலையில், மேலும் மூன்று புதிய குவாரிகள் துவங்குவது, சுற்றுச்சூழலையும், தங்களின் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும்' என, குற்றம் சாட்டினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு அனுமதி பெற்று 51 தனியார் கல் குவாரிகள் இயங்குகின்றன. இதில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் மட்டும் 24 கல் குவாரிகள் இயங்குகின்றன. மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான குவாரிகள் மதுார், சிறுதாமூர், அருங்குன்றம் உள்ளிட்ட பல கிராமங்களில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து இயங்குகின்றன.

இந்த குவாரிகளில், வெடி வைத்து பாறை கற்கள் உடைத்தெடுத்து, அந்த கற்களை சுற்றுவட்டார கிராமங்களில் இயங்கும் கிரஷர்கள் வாயிலாக ஜல்லி கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணலாக அரைத்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு லாரிகள் வாயிலாக விற்பனை செய்கின்றனர்.

கல்குவாரி, கிரஷர்களுக்கு பாதை இல்லாததால், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பதும், அதிக ஆழம் தோண்டி கற்களை எடுப்பதாகவும், அதிக சக்தி வாய்ந்த வெடிகள் பயன்படுத்தி பாறைகளை தகர்ப்பதாகவும் கிராம மக்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் பலமுறை முறையிடப்பட்டு உள்ளது.

அதிக சக்தி வாய்ந்த வெடியால், நில அதிர்வு ஏற்படுவதோடு அருகில் உள்ள வீடுகள் சேதமடைகின்றன. விவசாய கிணறுகளின் நீர்மட்டம் குறைந்து, சுற்றியுள்ள வயல்வெளி, கிராமங்கள் மாசடைந்து வாழ்வாதாரமே பாதிப்பதாக கிராமத்தினர் பல ஆண்டுகளாக புலம்பி வருகின்றனர். கடந்தாண்டு, சிறுதாமூர் கிராமத்தில், கிராம மக்களின் எதிர்ப்பை மீறி, புதிதாக 4 கல் குவாரிகள் அமைக்கப்பட்டு தற்போது இயங்குகின்றன.

இந்நிலையில், உத்திரமேரூர் ஒன்றியத்தில், சிறுமையிலுார், பினாயூர், பழவேரி ஆகிய 3 கிராமங்களில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்கள் விலைக்கு பெற்றுள்ளது. அந்த இடங்களில் புதிதாக கல் குவாரிகள் அமைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியுள்ளது. புதிய 3 கல் குவாரிகளுக்கு அனுமதி பெறுவதற்கு முன், கிராம மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம், திருமுக்கூடல் தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது.

கனிம வள நிதி உதவி இயக்குனர் வேடியப்பன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பிரகாஷ் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடந்தது.

சிறுமயிலுார், பினாயூர், பழவேரி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர், 100க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கிராமத்தினர், விவசாய அமைப்பினர் கூறியதாவது:

மாதவன் - சிறுமயிலுார்: கல் குவாரிகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குவாரி இயங்கும் பகுதிகளில், கிராமத்திற்கு 10 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். அவர்களுக்கு குவாரி விதிமுறைகளை கண்காணிக்க உரிமை வழங்க வேண்டும். அதிக எடை, தார்ப்பாய் போர்த்தி செல்லாதது பற்றி புகார் தெரிவிக்க வேண்டும். பாதுகாப்போடும், கண்காணிப்போடும் குவாரிகள் இயங்க வேண்டும்.

ரவி - அரும்புலியூர்: பினாயூரில் இயங்கும் குவாரியால், பினாயூர் ஏரியில் தண்ணீர் விடப்பட்டு மாசடைந்து வருகிறது. பாலாற்று கால்வாயில் கிரஷர் கழிவுநீர் கலந்து, ஆடு, மாடுகள் குடிக்க முடியவில்லை. கால்வாய்கள் துார்த்து மழைக்காலங்களில் ஏரிக்கு வர முடியாத நிலை தொடர்கிறது. இதனால், குவாரிகளுக்கு அனுமதி கூடாது.

சிவகுமார் - அருங்குன்றம்: ஏற்கனவே சிறுதாமூரில் குவாரி அமைக்கக்கூடாது என, கருத்து கேட்பு கூட்டத்தில் பேசினோம். ஆனால், அனுமதி வழங்கி குவாரி இயங்குகிறது. இதனால், சுற்றுவட்டார பகுதியினர் அவதிப்படுகிறார்கள். இப்போதைய கூட்டத்திலும் குவாரி அமைக்கக் கூடாது என வலியுறுத்துகிறோம். எனினும், பொதுமக்களின் கருத்து, அலட்சியம் செய்யப்படுகிறது. பொதுமக்கள் கருத்து கேட்பு கண்துடைப்பு.

தேவராஜன் - தமிழ்நாடு விவசாய அமைப்பு: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில், உத்திரமேரூர் கல் குவாரிகளை இழுத்து மூட வேண்டும் என தெரிவிக்கிறோம். ஆனால், புற்றீசல் போல குவாரிகள் வந்தபடி உள்ளன. இதனால், இங்குள்ள கிராமத்தினர் வாழ்வாதாரம் பாதிப்பதோடு, விவசாயமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. புதிய கல் குவாரிகளுக்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது.

இவ்வாறு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

இதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக கல் குவாரி அமைக்க நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் பலரும் பங்கேற்று தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர். பொது மக்களின் அக்கருத்துகள், வீடியோ காட்சியுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்பதிவு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு அனுப்பப்பட்டு, அப்பகுதிகளில் புதிய கல் குவாரிகள் அமைவது பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us