/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஒரகடம் உயர்மட்ட பாலம் 10 ஆண்டுகளிலேயே படுமோசம்:ஐ.ஐ.டி., வல்லுனர்களை அழைக்கும் நெ.சா.துறை
/
ஒரகடம் உயர்மட்ட பாலம் 10 ஆண்டுகளிலேயே படுமோசம்:ஐ.ஐ.டி., வல்லுனர்களை அழைக்கும் நெ.சா.துறை
ஒரகடம் உயர்மட்ட பாலம் 10 ஆண்டுகளிலேயே படுமோசம்:ஐ.ஐ.டி., வல்லுனர்களை அழைக்கும் நெ.சா.துறை
ஒரகடம் உயர்மட்ட பாலம் 10 ஆண்டுகளிலேயே படுமோசம்:ஐ.ஐ.டி., வல்லுனர்களை அழைக்கும் நெ.சா.துறை
ADDED : டிச 17, 2024 10:47 PM

காஞ்சிபுரம்:ஒரகடம் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு, 10 ஆண்டுகளே ஆன நிலையில், பாலத்தின் உறுதித்தன்மை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இதனால், ஐ.ஐ.டி., வல்லுனர்கள் ஆய்வு செய்த பின், புதிய பாலம் கட்டுவதா அல்லது சீரமைப்பதா என்ற முடிவுக்கு நெடுஞ்சாலை துறையினர் வர உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாதில் இருந்து ஒரகடம், படப்பை வழியாக வண்டலுார் செல்லும், 47 கி.மீ., துார மாநில நெடுஞ்சாலை உள்ளது.
இச்சாலை வழியாக காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகள் ஒரகடம், படப்பை, வண்டலுார், தாம்பரம் வழியாக சென்னைக்கு சென்று வருகின்றனர்.
மேலும், ஒரகடம் சுற்றியுள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை பேருந்துகள் இச்சாலை வழியாக செல்கின்றன.
தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் சார்பில், இருவழி பாதையாக இருந்த இச்சாலை, பல கோடி ரூபாய் செலவில், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்டது.
இதில், 620 மீட்டர் துாரத்திற்கு ஒரகடம் சந்திப்பில், 22 கோடி ரூபாய் செலவில், 10 ஆண்டுகளுக்கு முன் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.
வாலாஜாபாத் - வண்டலுார் இடையே உள்ள நான்கு வழிச்சாலையை, ஆறு வழிச்சாலையாக 175.69 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.
இதில், படப்பை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஒரகடம் மேம்பாலம் பலவீனம் அடைத்திருப்பதால், வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுகிறது. வாலாஜாபாதில் இருந்து வண்டலுார் மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தின் கான்கிரீட் உதிர்ந்து விழுகிறது.
இதை, தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரிகளும் சரியாக கண்காணித்து, பராமரிப்பு செய்வதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தினசரி பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டி உள்ளது என, வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.
இதுகுறித்து, சென்னை தமிழ்நாடு சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக அதிகாரிகள் கூறியதாவது:
ஒரகடம் மேம்பால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிகளை, நெடுஞ்சாலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இனிமேல், அவர்கள் தான் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை செய்வர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒரகடம் மேம்பால பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பணிக்கு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. நாங்களும், ஒரகடம் மேம்பாலத்தை சரிசெய்வதற்கு, ஐ.ஐ.டி., நிறுவன வல்லுனர்களை ஆய்வு செய்து, அறிக்கை தர வலியுறுத்தி உள்ளோம்.
இந்த ஆய்விற்கு பின், மேம்பாலம் பழுது நீக்குவதா அல்லது புதிய மேம்பாலம் கட்டுவதா என்பது தெரிய வரும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.