/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்புக்கு பணம் தராமல் படாளம் சர்க்கரை ஆலை இழுத்தடிப்பு வட்டி போட்டு பணம் கேட்டும் கரும்பு விவசாயிகள்
/
கரும்புக்கு பணம் தராமல் படாளம் சர்க்கரை ஆலை இழுத்தடிப்பு வட்டி போட்டு பணம் கேட்டும் கரும்பு விவசாயிகள்
கரும்புக்கு பணம் தராமல் படாளம் சர்க்கரை ஆலை இழுத்தடிப்பு வட்டி போட்டு பணம் கேட்டும் கரும்பு விவசாயிகள்
கரும்புக்கு பணம் தராமல் படாளம் சர்க்கரை ஆலை இழுத்தடிப்பு வட்டி போட்டு பணம் கேட்டும் கரும்பு விவசாயிகள்
ADDED : ஏப் 15, 2025 01:01 AM

காஞ்சிபுரம், படாளத்தில் இயங்கும் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் என, மூன்று மாவட்ட கரும்பு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் கரும்புகளை சர்க்கரை உற்பத்திக்காக அனுப்புகின்றனர்.
இந்தாண்டு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு, சரியான கால அவகாசத்திற்குள் பணம் தராமல் சர்க்கரை ஆலை இழுத்தடிப்பதாக, ஆலை நிர்வாகம் மீது, விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 3 லட்சம் டன் கரும்பு அரைத்த இந்த ஆலை, கடந்தாண்டு, 1.9 லட்சம் டன் மட்டுமே அரைத்தது என்றும், இந்தாண்டு அதில் பாதி கூட அரைக்காமல், வெறும், 70,000 டன் மட்டுமே அரைத்திருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள உத்திரமேரூர் விவசாயிகளே, 20,000 டன் கரும்புகளை அனுப்பியுள்ளனர். இதற்காக ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய, 6 கோடி ரூபாயில், 4 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும், பாக்கி 2 கோடி ரூபாயை வழங்காமல், அலைக்கழிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பினால், 14 நாட்களுக்குள் பணம் கொடுக்க வேண்டும் என, விவசாயிகளும், ஆலை நிர்வாகமும் ஒப்பந்தம் செய்த போதும், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என, மூன்று மாதங்களாகியும் பணம் கொடுக்காத நிலை நீடிக்கிறது.
கல்வி செலவு, குடும்ப செலவு என, பல்வேறு தேவைகளுக்கு சரியான நேரத்தில் பணம் கிடைக்காமல், உத்திரமேரூர் விவசாயிகள் கண்ணீர் வடிப்பதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
படாளம் சர்க்கரை ஆலை, மார்ச் 15 வரை ஆலையை இயக்கியுள்ளது. உத்திரமேரூர் விவசாயிகள் பிப்ரவரி மாதம் அனுப்பிய கரும்புக்கு இன்னும் பணம் கிடைக்கவில்லை.
இம்முறை அரைத்த, 69,000 டன் கரும்பில், 50,000 டன்னுக்கு பணம் கொடுத்ததாகவும், மீதமுள்ள 19,000 டன் கரும்புக்கு மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருப்பதாக கரும்பு ஆலை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார். மேலும், அரசிடம் பணம் கேட்டுள்ளதாகவும், பணம் வந்தவுடன் கொடுக்கப்படும் எனவும், தெரிவித்தனர்.
படாளம் கரும்பு ஆலை தன் உற்பத்தியை பல மடங்கு குறைத்து கொண்டது. ஆலையை தொடர்ந்து இயக்க நாங்கள் கேட்டு வருகிறோம். உற்பத்தி செலவு அதிகமானாலும் பலர் கரும்பு உற்பத்தி செய்கின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா, சாத்தனஞ்சேரி, சீட்டனஞ்சேரி சுற்றிலும் 20,000 டன்னுக்கு மேலாக கரும்பு உற்பத்தி நடக்கிறது. அவ்வாறு, ஆலைக்கு வழங்கப்பட்ட கரும்புக்கு பணம் தராமல் இழுத்தடிப்பது வேதனையாக உள்ளது. 14 நாட்களுக்குள் பணம் தராமல் இழுத்தடிக்கும் ஆலை நிர்வாகம், 15 சதவீதம் வட்டி போட்டு பணத்தை தர வேண்டும்.
ஆனால், எப்போதும் அதுபோல தந்தது இல்லை. கரும்பு வெட்டவும் ஆள் கிடைப்பதில்லை. இஷ்டம் போல் கூலி கேட்கின்றனர். இதனாலேயே, கரும்பு விவசாயத்தை பலர் விட்டுவிட்டனர்.
- எஸ்.தனபால்,
தலைவர்,
தமிழக கரும்பு விவசாயிகள் சங்கம்.
நகை அடமானம் வைத்து விவசாயிகள் அறுவடை செய்து அனுப்பினால், மாதக்கணக்கில் அலைகழிக்கின்றனர். தமிழ் புத்தாண்டு கொண்டாடவும், பிள்ளைகளுக்கு கல்வி செலவுக்கும்கூட பணம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
அதிகாரிகளும் சரிவர பதில் இல்லை. 15 நாட்களில் பணம் கொடுக்க வேண்டும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதுவரை பல விவசாயிகளுக்கு பணம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கூட்டுறவு வங்கியில் பணம் செலுத்த தாமதம் ஏற்பட்டால், தானாக வட்டி கணக்கீடு செய்கின்றனர். அதே, கூட்டுறவு சர்க்கரை ஆலை எங்களுக்கு வட்டி போட்டு பணம் தருவதில்லை.
- வி.கே. பெருமாள்,
கரும்பு விவசாயி,
வேடபாளையம்.