/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பள்ளிக்கரணை கோவில்கள் நிலம் ஏலம் விட மக்கள் கடும் எதிர்ப்பு
/
பள்ளிக்கரணை கோவில்கள் நிலம் ஏலம் விட மக்கள் கடும் எதிர்ப்பு
பள்ளிக்கரணை கோவில்கள் நிலம் ஏலம் விட மக்கள் கடும் எதிர்ப்பு
பள்ளிக்கரணை கோவில்கள் நிலம் ஏலம் விட மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : பிப் 15, 2024 01:06 AM

சென்னை:சென்னை, பள்ளிக்கரணையில் லட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஆதிபுரீஸ்வரர் கோவில்கள் அமைந்துள்ளன. இக்கோவில்களுக்கு சொந்தமாக சர்வே எண் 220/3, 234, 286, 220/2,235/2 ஆகியவற்றில், 1.80 லட்சம் சதுர அடி இடம் உள்ளது.
தரிசாக உள்ள கோவில் நிலங்களை, நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விட்டு வருமானம் பெற்று, கோவில் நிதியை சேர்க்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, 4.60 லட்சம் ரூபாய்க்கு முன்வைப்பு தொகையுடன் பொது ஏலம் விட, அறநிலையத்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதற்கான விளம்பரம், கடந்த வாரம் ஒரு சில நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. நேற்று முன்தினம், கோவில் பகுதியில் பொது ஏலம் தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதைக் கண்ட பொதுமக்கள், கடும் அதிர்ச்சியடைந்தனர்.
நேற்று, வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் பொது ஏலம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை சென்னை மண்டல உதவி கமிஷனர் நித்யா தலைமையில், நேற்று காலை 11:00 மணிக்கு ஏலம் நடக்க தயாரானது.
அப்போது, பள்ளிக்கரணை கோவிலுக்கு நிலம் கொடுத்தவர்களின் வம்சாவழியினர், ஹிந்து அமைப்பினர், பா.ஜ.,வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோவிலுக்குச் சென்று, பொது ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.
கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, எதிர்ப்பு தெரிவிப்பதற்கான காரணம் கேட்டுள்ளார். அப்போது, கோவில் நிலத்தை திருமண மண்டபம், கல்விக்கூடம் உள்ளிட்ட, பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
கோவில் இடத்தை அறங்காவலர் குழுவினர் தான் ஏலம் விட தகுதியானவர்கள் என்ற கருத்தை முன் வைத்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்களுடன் பேச்சு நடத்தினர். இதையடுத்து, குறிப்பிட்ட கோவில் தொடர்பான ஏலம், ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

