/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு கைவிரித்ததால்...மாற்றுவழி: கழிவுநீரை சுத்திகரித்து ஆலைகளுக்கு வழங்க திட்டம்
/
பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு கைவிரித்ததால்...மாற்றுவழி: கழிவுநீரை சுத்திகரித்து ஆலைகளுக்கு வழங்க திட்டம்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு கைவிரித்ததால்...மாற்றுவழி: கழிவுநீரை சுத்திகரித்து ஆலைகளுக்கு வழங்க திட்டம்
பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு கைவிரித்ததால்...மாற்றுவழி: கழிவுநீரை சுத்திகரித்து ஆலைகளுக்கு வழங்க திட்டம்
ADDED : ஏப் 02, 2025 08:48 PM

காஞ்சிபுரம்:வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சிகளின் மக்கள் தொகை மற்றும் அவற்றின் பரப்பளவு குறைவு காரணமாக, பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு அனுமதி அளிக்காததால், மாற்றுவழியை மேற்கொள்ள பேரூராட்சிகள் முடிவு செய்துள்ளன. கழிவுநீரை ஒரே இடத்தில் தேக்கி, சுத்திகரிப்பு செய்த பின் கிடைக்கும் நீரை, தொழிற்சாலை பயன்பாட்டிற்கு வழங்கவும் திட்டமிட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய மூன்று பேரூராட்சிகள் உள்ளன. இதில், ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் மக்கள் தொகை மற்றும் அதன் பரப்பளவு அடிப்படையில், பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த அரசு அனுமதி அளித்து, பணிகள் நடந்து வருகின்றன.
மீதமுள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய இரு பேரூராட்சிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இருந்தாலும், ஊராட்சிகளுக்குரிய கட்டமைப்பு வசதிகளே உள்ளன.
பொதுவாக 50,000 மக்கள் தொகை இருந்தால், பாதாள சாக்கடை திட்டத்தை, அரசு செயல்படுத்தும். ஆனால், உத்திரமேரூர், வாலாஜாபாதில் தலா 15,000 மக்களே வசிக்கின்றனர். இவற்றின் எல்லை பரப்பும், பெரியளவில் இல்லை.
இதனால், பாதாள சாக்கடை திட்டம் கோரி, பேரூராட்சி விடுத்த பரிந்துரையை அரசு நிராகரித்துள்ளது.
அதேசமயம், கழிவுநீரை ஒரே இடத்தில் தேக்கி, அதை சுத்திகரித்து கிடைக்கும் நீரை, தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு வழங்கவும், கசடு கழிவை உரமாக தயாரித்து வழங்கவும், நகர்ப்புற உள்ளாட்சி துறை அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து, இரு பேரூராட்சிகளிலும் கழிவுநீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு கழிவுநீர் மேலாண் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வாலாஜாபாத் அடுத்த, கிதிரிப்பேட்டை ஊராட்சியில், 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மல்லியங்கரை பகுதியில், 2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, பேரூராட்சிகள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத், உத்திரமேரூர் பேரூராட்சி பகுதிகளில், குடிநீர், கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். இது சம்பந்தமான திட்டங்கள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
மக்கள் தொகை மற்றும் பேரூராட்சி எல்லை பரப்பு குறைவு காரணமாக, பாதாள சாக்கடை திட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில்லை. ஆனால், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
புத்துணர்ச்சி மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான, ‛அம்ரூத்' திட்டத்தின் கீழ், 2021 - 22ம் நிதி ஆண்டு முதல், 2025 - 26ம் நிதி ஆண்டு வரை, தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கும் பணிகள் நடந்து வருகின்றன.
அதேபோல, சுகாதாரமான முறையில் கழிவுநீரை அகற்ற, தற்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பேரூராட்சிகளின் பிரதான தெருக்களில், கால்வாயில் சேரும் கழிவுநீரை, வாகனங்கள் வாயிலாக சேகரித்து, கழிவுநீர் மேலாண்மை திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் கொட்டப்படும்.
தேவையான உள்கட்டமைப்பு வசதி ஏற்படுத்தியபின், கழிவுநீரை சுத்திகரித்த பின் கிடைக்கும் தண்ணீரை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கு வழங்கப்படும். எஞ்சிய கசடு கழிவு உரமாக மாற்றப்படும்.
ஒரு சதுர அடிக்கு, ஒரு அங்குலம் அளவில் 20 லிட்டர் தண்ணீர் தேங்கும். 2 ஏக்கரில் தேக்கப்படும் கழிவுநீரில் இருந்து தினம் 5,000 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து வழங்கப்படும்.
இப்பணி நிறைவு பெற்றால், நகரங்களுக்கு இணையாக பேரூராட்சிகளிலும் பாதாள சாக்கடை பிரச்னை தீரும்.
இவ்வாறு அவர் கூறினார்.

