/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விநாயகர் சிலைகள் வைக்க 359 இடங்களில் அனுமதி
/
விநாயகர் சிலைகள் வைக்க 359 இடங்களில் அனுமதி
ADDED : ஆக 27, 2025 02:33 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 359 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிகாரிகள் கூட்டம் நடந்தது. இதில்,  விநாயகர் சிலைகளை வைக்க, கரைப்பதற்கு அனுமதித்துள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் விநாயகர் சிலைகள் கரைப்பதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை ஏரி, சர்வதீர்த்த குளம் என, இரு இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
ஹிந்து அமைப்புகள், ஆன்மிக குழுக்கள், பொது மக்கள் என பல தரப்பினரும், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 359 இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விநாயகர் சிலைகள் வைத்துள்ள குழுவினர், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
களை கட்டிய பூஜை பொருட்கள்
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, வீட்டில் வைத்து பூஜை செய்வதற்காக, சின்ன காஞ்சிபுரம் டோல்கேட், காந்தி சாலை, காமராஜர் சாலை, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதியில், சுண்ணாம்பு துகள், களிமண் உள்ளிட்டவையால் செய்யப்பட்ட வண்ணமயமான விநாயகர் சிலைகள், அரை அடி சிலை 100 ரூபாய் முதல், இரண்டரை அடி சிலை, 3,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
விநாயகர் குடைகள் 20 - 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. விநாயகருக்கு படையலிட்டு நைவேத்யம் செய்ய ராஜாஜி மார்க்கெட், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் மற்றும் சாலையோர நடைபாதை கடைகளில் ஆப்பிள், கம்பு, திராட்சை, கொய்யா, கரும்பு துண்டு, பேரிக்காய், மாதுளை உள்ளிட்டவை விற்பனைக்காக குவிக்கப்பட்டு விற்பனையும் களை கட்டியது.
இதில் 11 வகையான பழங்கள் அடங்கிய தொகுப்பு 200 - 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் பூஜைக்கான பூக்கள் வாங்க வாடிக்கையாளர் கூட்டம் அலைமோதியது. பூக்களின் தேவை அதிகரித்திருந்ததால், விலை கடந்த வாரத்தை விட இரு மடங்காக உயர்ந்து இருந்தது.
அதன்படி, மல்லி 1,200; முல்லை 800; சாமந்தி 400, பெங்களூரு ரோஜா 250, பன்னீர் ரோஜா 300, சம்பங்கி 350, கனகாம்பரம் 1,000, ஜாதிமல்லி 750, ஓசூர் ரோஜா ஒரு கட்டு 350 என, விற்கப்பட்டது. விலை உயர்ந்து இருந்தாலும், வாடிக்கையாளர் நெரிசலில் சிக்கியபடி தங்களுக்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.
ரயில்வே சாலை, செங்கழுநீரோடை வீதியில், நிரந்தர மற்றும் சீசன்  நேர தற்காலிக பொரி கடலை கடையில், ஒரு படி பொறி, உடைத்த கடலை, அவல் உள்ளிட்டவை அடங்கிய ஒரு செட் பாக்கெட் 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

