/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விபத்தில் தாய் - தந்தை இழந்த குழந்தைக்கு உதவி கேட்டு மனு
/
விபத்தில் தாய் - தந்தை இழந்த குழந்தைக்கு உதவி கேட்டு மனு
விபத்தில் தாய் - தந்தை இழந்த குழந்தைக்கு உதவி கேட்டு மனு
விபத்தில் தாய் - தந்தை இழந்த குழந்தைக்கு உதவி கேட்டு மனு
ADDED : டிச 10, 2024 07:03 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில், வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று காலை நடந்தது.
பட்டா, வேலைவாய்ப்பு, ரேஷன் அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றம் என, 493 பேர் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், அவர்களுக்கு சிறப்பாக பணிபுரிந்த சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இருவரின் வாரிசுதாரர்களுக்கு இணையவழி பட்டா வழங்கினார்.
தொடர்ந்து, எடையார்பாக்கம் கிராமத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்த ராஜேஷ் என்பரின் பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, கலெக்டர் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்தியதற்காக, ஸ்ரீபெரும்புதுார் ஸ்பார்க் மிண்டா நிறுவனத்திற்கு, தமிழக முதல்வரிடம் இருந்து பெற்ற விருதை, கலெக்டரிடம் காண்பித்து, அந்நிறுவன நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.
செவிலிமேடு பகுதியில் உள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் அளித்த மனு:
என் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும், காஞ்சிபுரத்திற்கு உட்பட்ட செவிலிமேடில் வசித்து வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம், என் மகள் வீட்டில் நடந்த தீ விபத்தில், இருவரும் இறந்துவிட்டனர்.
மூன்று வயது பேத்தி பவதாரினி காயங்களுடன் உயிர்தப்பினார். தற்போது, பேத்தி என்னுடன் வசிக்கிறார். தாய், தந்தை இல்லாமல், வசித்து வரும் குழந்தைக்கு, தற்போது வரை அரசு சார்பில் எந்த உதவியும் வழங்கப்படவில்லை.
செவிலிமேடு கிராமத்தில் கட்டப்பட்ட வீட்டிற்கு மின் இணைப்பும் வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். வயதான எங்களுடன் வாழும் சிறுமிக்கு அரசு சார்பில் உதவ வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செல்வழிமங்கலம் ஊராட்சியில் குடிநீர் வசதி செய்து தர ஊராட்சி தலைவர் சங்கர் அளித்த மனு:
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட செல்வழிமங்கலம் ஊராட்சியில், ஜம்போடை மற்றும் காலனி ஆகிய இரு குடியிருப்பு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீர் உவர்ப்பாகவும், உப்பு நீராகவும் உள்ளதால், டேங்கர் லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த இரு குடியிருப்பு பகுதிகளுக்கும், 500 மீட்டர் பைப்லைன், போர்வெல் அமைத்து, தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.