/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சுணக்கமாக நடைபெறும் பினாயூர் பால பணி
/
சுணக்கமாக நடைபெறும் பினாயூர் பால பணி
ADDED : அக் 21, 2024 02:15 AM

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அரும்புலியூரில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 400 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு பழையசீவரம் பாலாற்று தடுப்பணையில் இருந்து, பினாயூர் பாலாறு வழியாக தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய் உள்ளது.
இந்த நீர்வரத்து கால்வாய் இணைப்பாக பினாயூர் சாலையில் தரைப்பாலம் அமைந்துள்ளது. இந்த தரைப்பாலம் சேதம் அடைந்ததையடுத்து, அதை சீரமைக்க கோரிக்கை எழுந்தது.
மேலும், இந்தப் பாலத்தின் தரைதளம், அக்கால்வாயை காட்டிலும் உயரமாக உள்ளது. இதனால், மழைக்காலத்தில் பாலாற்றில் இருந்து ஏரிக்கு செல்லும் தண்ணீர், தரைப்பாலம் பகுதியில் தடைபட்டு தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை இடித்து கால்வாய் அளவிற்கு சமமாக அமைப்பதோடு, பாலத்தை உயரமாக அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக நபார்டு திட்டத்தின் கீழ், 2.63 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்பணி சுணக்கமாக நடைபெறுவதாகவும், பருவ மழைக்காலம் துவங்கி உள்ளதால், அதை விரைந்து முடிக்க அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

