/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
குழாய் பதிக்கும் பணி உத்திரமேரூரில் நிறுத்தம்
/
குழாய் பதிக்கும் பணி உத்திரமேரூரில் நிறுத்தம்
ADDED : ஆக 13, 2025 01:44 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூரில், 'அம்ரூத்' திட்டத்தில் நெடுஞ்சாலையோரத்தில், குழாய் பதிக்க அனுமதி பெற்று தருவதில், பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதால், பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டு உள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 40,000 பேர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியினரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வெங்கச்சேரி செய்யாற்றில் நான்கு ஆழ்த்துளை குடிநீர் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து, குழாய்கள் மூலமாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, பேரூராட்சி முழுதும் வினியோகம் செய்யப்படுகிறது.
அவ்வாறு வினியோகம் செய்யப்படும் குடிநீர் கோடை வெயில் காலத்தில் போதுமானதாக இல்லாமல் இருந்தது. இதனால், உத்திரமேரூர் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்க, 2022 -- 23 நிதி ஆண்டில், 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், 21 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுக்கு முன் அதற்கான பணிகள் துவங்கப்பட்டன.
அதை தொடர்ந்து, பேரூராட்சியின் சாலையோரங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது. குழாய் பதிக்கும் பணிகள் முடிக்கப்பட்ட பகுதிகளில், இதுவரை 2,600 குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி வழியாக, புக்கத்துறை -- மானாம்பதி நெடுஞ்சாலை 5 கி.மீ., செல்கிறது. இந்த நெடுஞ்சாலையோரத்தில் குழாய் பதிக்கும் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
பேரூராட்சி நிர்வாகம் குழாய் பதிக்க நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெறுவதில் அலட்சியம் காட்டி வருகிறது. கடந்தாண்டு முடியவேண்டிய அம்ரூத் குடிநீர் வழங்கும் திட்ட பணிகள், இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.