/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு உழவு பணிகள் துவக்கம்
/
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு உழவு பணிகள் துவக்கம்
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு உழவு பணிகள் துவக்கம்
உத்திரமேரூரில் சம்பா பருவத்திற்கு உழவு பணிகள் துவக்கம்
ADDED : நவ 06, 2025 11:24 PM

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பகுதிகளில் சம்பா பருவத்திற்கான, உழவு பணிகளை விவசாயிகள் துவக்கி உள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்களில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. தற்போது, உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள காக்கநல்லுார், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, மருதம், மருத்துவன்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், நவரை, சொர்ணவாரி பருவத்தை தொடர்ந்து, சம்பா பருவத்திற்கு நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர்.
அதற்காக, விவசாயிகள் ஏரி மற்றும் கிணற்று பாசன நீரை பயன்படுத்தி, விளை நிலங்களில் டிராக்டர் மூலமாக உழவு பணிகளை துவக்கி உள்ளனர்.
இது குறித்து கரும்பாக்கம் விவசாயிகள் கூறியதாவது:
இந்த ஆண்டு பருவமழை துவங்கும் முன்பே, திருமுக்கூடல் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, அரும்புலியூர், கரும்பாக்கம், சீட்டணஞ்சேரி, பினாயூர் ஆகிய கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
எனவே, கிணற்று பாசனத்தை பயன்படுத்தி, சம்பா பருவ நடவு செய்வதற்காக, உழவு பணியினை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து உத்திரமேரூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முத்துலட்சுமி கூறுகையில், ''தற்போது, உத்திரமேரூர் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில், சம்பா பருவ நடவு பணிக்காக, நெல் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நெல் விதைகளை இதுவரை பெறாமல் உள்ள விவசாயிகள், வேளாண்மை விரிவாக்க மையங்களை உடனே அணுகி பெற்றுக் கொள்ளலாம்,'' என்றார்.

