/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 92.28 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் அதிகரிப்பு
/
காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 92.28 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் அதிகரிப்பு
காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 92.28 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் அதிகரிப்பு
காஞ்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி... 92.28 சதவீதம்! கடந்த ஆண்டைவிட 1.46 சதவீதம் அதிகரிப்பு
ADDED : மே 07, 2024 04:26 AM

காஞ்சிபுரம் : பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வில், காஞ்சிபுரம் மாவட்டம் 92.28 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டை காட்டிலும் 1.46 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளது. வழக்கம்போல, மாணவர்களை காட்டிலும் மாணவியரே 5.9 சதவீதம் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுதும், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்தன. அதற்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்டத்திற்கான தேர்வு முடிவுகளை கலெக்டர் கலைச்செல்வி நேற்று வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5,680 மாணவர்களும், 6,733 மாணவியர் என, மொத்தம் 12,413 பேர் தேர்வெழுதினர்.
தேர்வெழுதிய மாணவ - மாணவியரில், 11,455 மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 92.28 சதவீதமாகும். கடந்தாண்டு தேர்ச்சி சதவீதம் 90.82 ஆக இருந்தது. நடப்பாண்டில் 1.46 சதவீத தேர்ச்சி அதிகரித்துள்ளது.
33வது இடம்
தேர்ச்சி பெற்றோரில், 89.08 சதவீதம் மாணவர்களும், 94.98 சதவீதம் மாணவியரும் ஆவர். மாணவியர், மாணவர்களை காட்டிலும், 5.9 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தின் அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம், 88.78ஆக பதிவாகியுள்ளது. மாநில அளவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீத அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் 33வது தர வரிசையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டு 31வது இடத்தை பிடித்திருந்தது. இம்முறை, இரண்டு இடங்கள் பின்தங்கி, 33வது இடத்தை பெற்றுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டு குறைந்தது போல, இந்தாண்டு குறையக்கூடாது என, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தோம். பல பள்ளிகளை தொடர்ந்து கண்காணித்தோம்.
காஞ்சிபுரம் மாநகராட்சி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, படப்பை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சேக்கிழார் மேல்நிலைப் பள்ளி என பல பள்ளிகளை, அதிகாரிகள் தனி பொறுப்பு பெற்று கண்காணித்தோம்.
அரசு பள்ளிகளின் தேர்ச்சி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பள்ளிகளின் தேர்ச்சி சதவீதமும் இம்முறை அதிகரித்துள்ளது. வழக்கமாக, மாணவர்களை காட்டிலும், மாணவியரின் தேர்ச்சி அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
614 மாணவர்கள் சென்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாட வாரியாக, 614 மாணவ - மாணவியர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக, வணிகவியல் பாடத்தில், 149 பேர், நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் எடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தனியார் மெட்ரிக் பள்ளிகள் 98.28 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. அடுத்தபடியாக, அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.60 இடம் பெற்றுள்ளன. அரசு பள்ளிகள், 88.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மொழித்தேர்வில் 282 மாணவர்கள் தோல்வி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான முடிவுகள், நேற்று வெளியான நிலையில், அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் கடந்தாண்டை காட்டிலும் சற்று உயர்ந்துள்ளது.
அதேசமயம், பாட வாரியான தேர்ச்சி சதவீதத்தை கணக்கிடும் போது,இயற்பியல், வேதியியல், வணிகவியல் போன்ற பாடப்பிரிவுகளை காட்டிலும், மொழித்தேர்வில் அதிக மாணவ - மாணவியர் தோல்வியடைந்திருப்பது தெரியவந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொழித்தேர்வில் 12,413 மாணவ - மாணவியர் தேர்வெழுதிய நிலையில், 12,131 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 282 பேர் தோல்விடையந்துள்ளனர்.
ஆங்கில பாடத்திலேயே, 243 பேர் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர். ஆனால், மொழித்தேர்வில் அதிக மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
'ஷாக்' கொடுத்த 3 அரசு பள்ளிகள்
காஞ்சிபுரம் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கடந்தாண்டு, 133 மாணவர்கள் தேர்வெழுதி, வெறும் 42 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று, 31 சதவீத தேர்ச்சி மட்டுமே பெற்றனர். 91 மாணவர்களும் தோல்வி அடைந்திருந்தனர்.
படப்பை ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில், 64.4 சதவீதமும், குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 65.6 சதவீதம் மட்டுமே கடந்தாண்டு தேர்ச்சி பெற்றன.
இப்பள்ளிகள் மோசமான நிலையை கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டன.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில், தேர்வு முடிவுகள் அதிகரித்த காரணத்தால், கல்வித் துறை அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.
சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, 83.84 சதவீதமும், படப்பை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 70.90 சதவீதமும், குன்றத்துார் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, 89.87 சதவீதமும் பெற்றுள்ளது.
கல்வித் துறையினர் கவனம் செலுத்திய மூன்று அரசு பள்ளிகளிலும், இம்முறை கூடுதல் தேர்ச்சி சதவீதம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.