/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் ரூ.44 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
/
காஞ்சியில் ரூ.44 கோடியில் பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 11, 2024 12:05 AM

குன்றத்துார்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 3.96 லட்சம் கார்டு தாரர்களுக்கு, 43.99 கோடி ரூபாய் மதிப்பில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 634 ரேசன் கடைகள் வாயிலாக பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் கார்டுதார்களுக்கு நேரடியாக சென்று வினியோகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று, தமிழகம் முழுதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்துார் ஒன்றியம், படப்பை பேருந்து நிலையம் அருகே, அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
சிறு, குறு தொழிற்துறை அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் தி.மு.க., - எம்.பி.,பாலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ சர்க்கரை, 1 கிலோ பச்சரிசி, முழு கரும்பு ஆகியவற்றை ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கினர்.
ஸ்ரீபெரும்புதுார் காங்., - எம்.எல்.ஏ.,செல்வபெருந்தகை, மாவட்ட குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 634 ரேசன் கடைகளில், 3.96 லட்சம் கார்டுதாரர்களுக்கு, 43.99 கோடி ரூபாய் மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு வழங்கும் ரேஷன் கடைகளில், முறையாக வழங்கப்படுகிறதா எனவும் கலெக்டர் கலைச்செல்வி பல்வேறு கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக்கடை, தனலட்சுமி நகர், முருகன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று, உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல் ஏ., சுந்தர், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி, செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம், திருமுக்கூடல் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளிலும், தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று நடந்தது.

