/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
உப்புத்தன்மையால் விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலத்தடி நீர் புது வழியில் தீர்வு பருவமழையை நம்பி மாற்றி சிந்தித்த பொன்னேரி விவசாயிகள்
/
உப்புத்தன்மையால் விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலத்தடி நீர் புது வழியில் தீர்வு பருவமழையை நம்பி மாற்றி சிந்தித்த பொன்னேரி விவசாயிகள்
உப்புத்தன்மையால் விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலத்தடி நீர் புது வழியில் தீர்வு பருவமழையை நம்பி மாற்றி சிந்தித்த பொன்னேரி விவசாயிகள்
உப்புத்தன்மையால் விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலத்தடி நீர் புது வழியில் தீர்வு பருவமழையை நம்பி மாற்றி சிந்தித்த பொன்னேரி விவசாயிகள்
ADDED : ஆக 29, 2025 11:24 PM

உப்புத்தன்மையால் விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலத்தடி
நீர் புது வழியில் தீர்வு பருவமழையை நம்பி மாற்றி சிந்தித்த பொன்னேரி
விவசாயிகள்
பொன்னேரி :பொன்னேரி
தாலுகாவில், நான்கு குறுவட்டங்களில் உள்ள 150க்கும் மேற்பட்ட கிராமங்களில்
நிலத்தடி நீர் உவர்ப்பாக இருப்பதால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.
தற்போது, நாற்றாங்கால் முறையில் நடவுப்பணிகளை மேற்கொள்வதை கைவிட்டு,
வடகிழக்கு பருவமழையை நம்பி, சம்பா பருவத்திற்கு 20,000 ஏக்கரில் நேரடி நெல்
விதைப்பிற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம்,
பொன்னேரி தாலுகாவிற்கு உட்பட்ட கோளூர், திருப்பாலைவனம், காட்டூர், மீஞ்சூர்
ஆகிய குறுவட்டங்களில் உள்ள, 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி
நீர் உவர்ப்பாக இருக்கிறது.
பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியை ஒட்டி
மேற்கண்ட கிராமங்கள் இருப்பதால், ஆழ்துளை மோட்டார்கள் மூலம் கிடைக்கும்
நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையுடன் இருக்கிறது.
இந்த உவர்ப்பு
நீரை பயன்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்ளும்போது, நெற்பயிர்கள் சீரான
வளர்ச்சி இல்லாமல், விவசாயிகள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர்.
சம்பா, சொர்ணவாரி என, இருபோகம் நெல் பயிரிட்டு வந்த விவசாயிகள், நிலத்தடி நீர் உவர்பால் சொர்ணவாரி பருவத்தை கைவிட்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும், வடகிழக்கு பருவமழை மற்றும் ஏரிகளில் தேங்கும்
தண்ணீரை கொண்டு, சம்பா பருவத்தின்போது நெல் பயிரிட துவங்கினர். பருவமழை
துவங்குவதற்கு முன், விளைநிலங்களை உழுது தயார்படுத்தி, நாற்றாங்கல்
வளர்ப்பில் ஈடுபடுவர்.
இதற்கு, ஆழ்துளை மோட்டார்கள் வாயிலாக
கிடைக்கும் நிலத்தடிநீரையே பயன்படுத்தி வந்தனர். இந்த நீரில் நெல்
நாற்றுகளும் சரிவர வளராத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, விவசாய பணிகளில் மாற்றம் கொண்டு வந்தனர். நாற்றாங்கால் நடவு முறையை கைவிட்டு, நேரடி நெல் விதைப்பு முறைக்கு மாறினர்.
வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு ஒரு மாதம் முன், விளைநிலங்களில் தண்ணீர்
பாய்ச்சாமல் உழுது தயார்படுத்தி வைக்கின்றனர். பின், பருவமழை துவங்குவதற்கு
முன், நேரடியாக நெல் விதைகளை விளைநிலங்களில் துாவி விடுகின்றனர்.
மழைக்கு, விதைகளில் முளைப்பு ஏற்பட்டு, படிப்படியாக வளர துவங்கி
விடுகிறது. விதைப்பு செய்து, 150 நாட்களுக்கு பின் அறுவடை செய்கின்றனர்.
கோளூர் குறுவட்டத்தில் துவங்கிய நேரடி நெல் விதைப்பு முறை படிப்படியாக
மற்ற குறுவட்டங்களுக்கும் பரவி, விவசாயிகள் அதையே பின்பற்றி வருகின்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், 5,000 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட
நிலையில், படிப்படியாக உயர்ந்து, தற்போது, 20,000 ஏக்கர் வரை
உயர்ந்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
எங்கள் கிராமங்களில், 140 - 160 அடியில் ஆழ்துளை கிணறுகள் அமைத்தாலும்,
நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது. நாற்றாங்கால் முறைக்கு நிலத்தடிநீர்
தேவை உள்ளது. ஆனால், நிலத்தடி நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடிவதில்லை.
இதனால், நேரடி நெல் விதைப்பிற்கு மாறியுள்ளோம்.
ஆகஸ்ட் -
செப்டம்பர் மாதத்தில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடுகிறோம். இதனால்,
நெற்பயிர்களின் வேர்கள் கடும் மழையை தாங்கும் தன்மையை பெறும்.
நடவு கூலி, உரச்செலவு மற்றும் தண்ணீர் தேவையும் குறைகிறது. ஆண்டுக்கு
ஒருமுறை நெல் பயிரிட்டு, ஆண்டு முழுதும் எங்களது குடும்ப செலவினங்களை
பார்க்க வேண்டியுள்ளது. இதுபோன்ற கிராம விவசாயிகளுக்கு, அரசு கூடுதல்
சலுகைகள் மற்றும் திட்டங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.