/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் குளம் சீரமைப்பு
/
ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் குளம் சீரமைப்பு
ADDED : அக் 27, 2024 12:32 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 1வது வார்டில் வெள்ளேரி அம்மன் கோவில் உள்ளது. இப்பகுதியில், 1வது தெற்கு புது தெருவில், 76 சென்ட் பரப்பிலான பொதுக்குளம் மற்றும் பொது வழி உள்ளது.
இங்குள்ள பொதுக்குளத்தை சுற்றி அப்பகுதியைச் சேர்ந்த சிலர், வைக்கோல் குவித்தும், குப்பை கொட்டியும், மரக்கன்றுகள் நட்டும், கட்டடங்கள் கட்டியும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதனிடையே, இந்த குளத்தை தூர்வாரி சீர் செய்ய பேரூராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டு, தற்போது அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
எனினும், குளத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றபடாமல், குறைந்த அளவிலான நிலப்பரப்பில் குளம் சீரமைக்கப்படுவதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி வாசிகள் கூறியதாவது:
வாலாஜாபாத் வெள்ளேரி அம்மன் கோவில், தெற்கு புது தெருவில் உள்ள பொதுக்குளம் 20 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரி சீரமைப்பு பணி நடைபெறுகிறது.
இப்பணியில், குளத்தின் 4 பகுதி கரைகளிலும் கருங்கற்கள் பதித்து, படிகள் அமைத்து தர வேண்டும். ஆனால், குளத்தின் பெரும்பாலான ஆக்கிரமிப்பு பகுதிகளை விடுவித்து, குளத்திற்கான 76 சென்ட் மொத்த நிலப்பரப்பில், வெறும் 15 சென்ட் அளவிலான நிலப் பகுதியே தற்போது குளமாக சீரமைக்கப்படுகிறது.
இதனால், இப்பகுதி குளத்தின் அளவு மிகவும் சுருங்கிவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, குளத்திற்கான மொத்த பகுதியையும் சேர்த்து தூர்வாரி சீர் செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.