/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ள மீட்புக்கு தயார்: கலெக்டர் ஆரஞ்ச் அலர்ட்
/
வெள்ள மீட்புக்கு தயார்: கலெக்டர் ஆரஞ்ச் அலர்ட்
ADDED : அக் 14, 2024 01:55 AM
காஞ்சிபுரம்::தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பாகவே, கனமழை பெய்ய துவங்கியுள்ளது.
தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களில் நாளை, கனமழை பெய்யும் எனவும், சென்னை, காஞ்சி புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு, ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க அந்தந்த தாசில்தார்கள், கோட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில், 72 இடங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மீட்புப் பணிகளை கவனிக்க, 11 துறை அதிகாரிகள் கொண்ட, 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
'வாட்ஸாப்'
இந்த குழுக்களையும், களத்தில் இறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாவட்டத்திலேயே அதிக மழை பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளாக காஞ்சிபுரம் மாநகராட்சியின் சில பகுதிகளும், குன்றத்துார் தாலுகாவில் உள்ள சில பகுதிகளும் உள்ளன.
இந்த இடங்களையும், குடியிருப்புகளையும், 24 மணி நேரமும் கண்காணிக்க அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம ஊராட்சி செயலர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு ஏற்கனவே கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ஏற்கனவே பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கூட்டங்களில் வழங்கப்பட்ட அறிவுரைகளை பின்பற்ற, 'வாட்ஸாப்' வாயிலாக அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
மழை, வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
மழை, வெள்ள பாதிப்புகள் பற்றி 044 -- 27237107 என்ற தொலைபேசி எண்ணிலும், 80562 21077 என்ற மொபைல்போன் எண்ணிற்கு வாட்ஸாப் வாயிலாக புகார் தெரிவிக்கலாம் என, பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பாதிப்பு
இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:
மழை, வெள்ள பாதிப்புகளை சந்திக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து வகையிலும் தயாராக உள்ளது. செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பெரும்பாலான நீர் நிலைகள் முழுமையாக நிரம்பாமல் உள்ளது.
இதனால், இம்முறை பெய்யும் மழையால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது என நினைக்கிறோம். இருப்பினும், குன்றத்துார் தாலுகாவில் உள்ள வரதராஜபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்கு தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளேன்.
ஒரே நாளில் மழைநீர் வடிந்து விட்டால் பிரச்னை இருக்காது. ஆனால், நாள் கணக்கில் மழைநீர் தேங்கினால், அருகில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைப்போம்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் மழை பாதிப்பு இடங்களை கண்காணிக்க காஞ்சிபுரம் சப் - -கலெக்டரிடம் அறிவுறுத்தியுள்ளேன்.
குன்றத்துார், காஞ்சிபுரம் தவிர வேறு எங்கும் மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்படாது. அந்த பகுதிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.