/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
72 பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மும்முரம்; பருவமழை, வெள்ளத்தில் பாதிக்கும் 12,925 வீடுகள்
/
72 பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மும்முரம்; பருவமழை, வெள்ளத்தில் பாதிக்கும் 12,925 வீடுகள்
72 பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மும்முரம்; பருவமழை, வெள்ளத்தில் பாதிக்கும் 12,925 வீடுகள்
72 பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை மும்முரம்; பருவமழை, வெள்ளத்தில் பாதிக்கும் 12,925 வீடுகள்
UPDATED : அக் 05, 2024 05:34 AM
ADDED : அக் 05, 2024 12:32 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைநீர் சூழ்ந்து அல்லது வெள்ள பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு இருப்பதாக, 72 இடங்களில், 12,925 வீடுகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இந்த வீடுகள் அமைந்துள்ள பகுதிகளை, துணை கலெக்டர்கள் நிலையிலான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை இம்மாதம் துவங்க உள்ளது. இம்முறை இயல்பை காட்டிலும் பருவமழை கூடுதலாக பெய்யும் என, வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2022ல், 'மாண்டஸ்' புயல், 2023ல், 'மிக்ஜாம்' புயல் ஆகியவற்றால், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன.
பருவமழை காலத்தில் மீட்பு பணிகளை கையாள்வதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், இரு மாதங்களாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின் வாரியம், தீயணைப்பு, வருவாய், போலீஸ் போன்ற, 11 துறையினர் அடங்கிய, 21 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மழைநீர் புகும் இடங்களில் பணியாற்றுவர்.
கனமழை பெய்யும் பகுதிகளை கண்காணிக்கவும், அங்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், புகார்களை பதிவு செய்யவும், நேரடி கூட்டங்களிலும், ஆன்லைனில் நடைபெறும் கூட்டங்களிலும் அதிகாரிகளுக்கு கலெக்டர் கலைச்செல்வி அறிவுறுத்தி வருகிறார்.
வருவாய் துறை மட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பி.டி.ஓ., அலுவலகங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தாமல் ஏரி, தென்னேரி, மணிமங்கலம் ஏரி போன்ற பெரிய நீர் ஆதாரங்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஒரத்துார் நீர்த்தேக்க பணிகள் இன்னும் முழுமையாக முடியாத நிலையில், கடந்தாண்டு அதன் கரை பகுதிகள் உடைந்து, நீர்த்தேக்கத்தில் இருந்த தண்ணீர் பெருமளவு வீணாக வெளியேறியது. மணல் மூட்டைகள் கொண்டு கரை சீரைமைக்கப்பட்டது.
அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் இருக்க, ஒரத்துார் நீர்த்தேக்கத்தின் கரைகளை பலமாக வைக்க வேண்டும் என, நீர்வளத்துறையினருக்கு, அத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழைநீர் சூழ்ந்து பாதிக்கும் இடங்களாக, 72 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் உள்ள வீடுகளை கணக்கிட்டதில், 12,925 வீடுகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
இந்த வீடுகளை, எளிதாக மழைநீர் சூழ்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளதால், பல்வேறு துறை அதிகாரிகள், மழை பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்கின்றனர்.
குறிப்பாக, துணை கலெக்டர்கள் நிலையிலான அதிகாரிகள் இப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க, கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், மழையால் அதிகம் பாதிக்கப்படும் இடங்களாக, குன்றத்துார், மாங்காடு சுற்றிய பகுதிகளே உள்ளன. அதிலும், குன்றத்துார் தாலுகாவில் உள்ள ராயப்பா நகர், அஷ்டலட்சுமி நகர், சாந்தி நிகேதன் நகர், மகாலட்சுமி நகர், புவனேஸ்வரி நகர் போன்ற இடங்கள் உள்ளன.
அதேபோல, காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாரதி நகர், அருந்தியர்பாளையம், மின் நகர், வேகவதி ஆற்றின் கரையோர பகுதிகள் மழையால் அதிகளவில் பாதிக்கப்படும்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கூறியதாவது:
மழை, வெள்ளம் பாதிக்கும் இடங்களை, துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளும், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தீயணைப்பு மீட்பு படையினர் உள்ளிட்டோர் அங்கேயே முகாமிட்டு கண்காணிக்க அறிவுறுத்தி உள்ளோம்.
கலெக்டர் தலைமையில் மேலும் ஒரு ஆய்வு கூட்டம் நடக்க உள்ளது. அப்போது, மழை பாதிப்பு குறித்து மேலும் ஆலோசித்து, தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.