/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் பிரதமர் முன்னோடி திட்டம் முடக்கம் பிற ஊராட்சிகளில் மேம்படுத்த முடியாமல் தவிப்பு
/
காஞ்சியில் பிரதமர் முன்னோடி திட்டம் முடக்கம் பிற ஊராட்சிகளில் மேம்படுத்த முடியாமல் தவிப்பு
காஞ்சியில் பிரதமர் முன்னோடி திட்டம் முடக்கம் பிற ஊராட்சிகளில் மேம்படுத்த முடியாமல் தவிப்பு
காஞ்சியில் பிரதமர் முன்னோடி திட்டம் முடக்கம் பிற ஊராட்சிகளில் மேம்படுத்த முடியாமல் தவிப்பு
ADDED : மார் 20, 2025 08:45 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பிரதம மந்திரி கிராம முன்னோடி' திட்டம் இரு ஆண்டுகளுக்கு ஊராட்சிகளை தேர்வு செய்யவில்லை. இதனால், மத்திய அரசின் திட்டம் முடக்கப்பட்டுள்ளதா என, ஊராட்சி தலைவர்கள் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், '‛பிரதம மந்திரி கிராம முன்னோடி' திட்டத்தின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறை வாயிலாக, கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை ஆராய்ந்து, அப்பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிக்கு, மத்திய அரசு தலா 20 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்கிறது. இதை, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவிலும் ஒப்புதல் பெறப்பட்டு, வளர்ச்சி பணிகள் செய்கின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 'பிரதம மந்திரி கிராம முன்னோடி' திட்டத்தின் கீழ், 2018- 19ம் ஆண்டின் கீழ், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், ஐந்து ஊராட்சிகள்; 2019 - 20ம் நிதி ஆண்டு ஒரு ஊராட்சி; 2021 - 22ம் நிதி ஆண்டு 94 ஊராட்சிகள்; 2022 - 23ம் நிதி ஆண்டு 24 ஊராட்சிகள் என, மொத்தம் 124 ஊராட்சிகளில் 24.44 கோடி ரூபாய் செலவில் 314 பணிகள் தேர்வு செய்து, 295 பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம், 19 பணிகள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 274 ஊராட்சிகளில், 124 ஊராட்சிகளில் சிறுபாலம் கட்டுவது, கழிவுநீர் கால்வாய் கட்டுவது, பழுதான அங்கன்வாடி மையங்களை சீரமைப்பது ஆகிய பணிகள் இத்திட்டம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டன.
மீதம் இருக்கும், 150 ஊராட்சிகளை 2024 - 25 மற்றும் 2025- - 26ம் ஆகிய இரு நிதி ஆண்டுகளுக்கு வளர்ச்சி பணிக்கு தேர்வு செய்யவில்லை என, புலம்பல் ஏற்படுத்தி உள்ளது.
இதனால், பிற ஊராட்சிகளில் இருக்கும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களின் குடியிருப்புகளில் வசதிகள் மேம்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சில ஊராட்சிகளை தேர்வு செய்த சாலை, கால்வாய், கட்டடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கிறது.
இரு ஆண்டகளாக பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம் செயல்படுத்தவில்லை. இதனால், வளர்ச்சி பணிகளை தேர்வு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
கிடைக்கும் ஒன்றிய பொது நிதி, ஊராட்சி பொது நிதி ஆகிய நிதிகளை பயன்படுத்தி சில பணிகளை பூர்த்தி செய்து வருகிறோம். விடுபட்ட 150 ஊராட்சிகளை தேர்வு செய்து வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்திற்கு பதிலாக, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்புகளில் சாலை, குடிநீர், கால்வாய் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம்.
பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டத்தில் விடுபட்ட ஊராட்சிகளை தேர்வு செய்து, அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில் தேர்வு செய்து வளர்ச்சி பணிகள் செய்து கொடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினர்.