/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் 23 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு நீண்ட கால போராட்டங்களுக்கு பின் உத்தரவு
/
காஞ்சியில் 23 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு நீண்ட கால போராட்டங்களுக்கு பின் உத்தரவு
காஞ்சியில் 23 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு நீண்ட கால போராட்டங்களுக்கு பின் உத்தரவு
காஞ்சியில் 23 தாசில்தார்களுக்கு பதவி உயர்வு நீண்ட கால போராட்டங்களுக்கு பின் உத்தரவு
ADDED : நவ 13, 2024 07:36 PM
காஞ்சிபுரம்:வருவாய் துறையில், நேரடி நியமனம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு, 2012ம் ஆண்டு, டிசம்பரில், 216 பேர், உதவியாளர்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இதையடுத்து, 2019ல், மாவட்டம் பிரிந்து, செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. அப்போது, 2012ல் தேர்வாகி பணியில் சேர்ந்த 216 வருவாய் உதவியாளர்களில், 100க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இரு மாவட்டங்களிலும் பணியாற்றும் இவர்கள், அடுத்த 5 ஆண்டுகளில், துணை தாசில்தாராகவும், அடுத்த 2 ஆண்டுகளில் தாசில்தாராக பதவி உயர்வு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், 10 ஆண்டுகளாக முறையான பதவி உயர்வும் இல்லாமல், தேர்வு நிலை உதவியாளர்களாகவும், துணை தாசில்தார்களாகவும் பணியாற்றி வருகின்றனர்.
பதவி உயர்வு தொடர்பான அரசாணை விதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில் ஏற்பட்ட பல குழப்பங்கள் காரணமாக, முறையான பதவி உயர்வு கிடைக்கவில்லை என, வருவாய் துறையினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.
பதவி உயர்வு பட்டியலை வெளியிட வேண்டும் என, வருவாய் துறையில் செயல்படும் இரு சங்கங்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல கட்ட போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி, பதவி உயர்வு பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட வேண்டும் என, செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வருவாய் துறையினர், 20க்கும் மேற்பட்டோர், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் முறையிட்டனர்.
பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 துணை தாசில்தார்களுக்கு, தாசில்தார்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கி, கலெக்டர் கலைச்செல்வி நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளார்.
நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் புதிய தாசில்தார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக தாசில்தார் பதவி உயர்வு கிடைக்காமல் போராடி வந்த வருவாய் துறையினருக்கு, இப்பதவி உயர்வு ஆறுதலை அளித்துள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நீதிமன்ற உத்தரவு காரணமாக, 2018ம் ஆண்டில், தகுதியானவர்களை கணக்கிட்டு, இந்த 23 துணை தாசில்தார்களுக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு மற்றும் அரசு உத்தரவை தொடர்ந்து, இப்பட்டியல் மாற்றப்படலாம். நில எடுப்பு உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் புதிய தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு என, இரு மாவட்டங்களிலும் சேர்ந்து, 47 பேரின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 23 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ளவர்களின் பட்டியலை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கியுள்ளோம். அந்த மாவட்டத்தில் பதவி உயர்வு பட்டியல் தயாரித்து வெளியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.