/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கர்ப்பிணியருக்கு மதிய உணவு வழங்குவதில்...தில்லுமுல்லு:வட்டார சுகாதார நிலையங்கள் மீது குற்றச்சாட்டு
/
கர்ப்பிணியருக்கு மதிய உணவு வழங்குவதில்...தில்லுமுல்லு:வட்டார சுகாதார நிலையங்கள் மீது குற்றச்சாட்டு
கர்ப்பிணியருக்கு மதிய உணவு வழங்குவதில்...தில்லுமுல்லு:வட்டார சுகாதார நிலையங்கள் மீது குற்றச்சாட்டு
கர்ப்பிணியருக்கு மதிய உணவு வழங்குவதில்...தில்லுமுல்லு:வட்டார சுகாதார நிலையங்கள் மீது குற்றச்சாட்டு
ADDED : மே 24, 2025 01:14 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நிலையங்களில், பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணியருக்கு மதிய உணவு வழங்குவதில், தில்லுமுல்லு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள்; ஐந்து நகர் நல மையங்கள்; 28 ஆரம்ப சுகாதார நிலையங்கள்; 168 துணை சுகாதார நிலையங்கள் என, 206 சுகாதார நிலையங்கள் உள்ளன.
இந்த நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணியருக்கு பரிசோதனை, தடுப்பூசி, பொது மருத்துவ சிகிச்சை ஆகியவை அளிக்கப்படுகிறது.
நிதி ஒதுக்கீடு
தவிர, வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணியருக்கு குடிநீர், குளுக்கோஸ், மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை, அந்தந்த சுகாதார நிலையம் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
கர்ப்பிணியர் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு கீரை, முட்டையுடன் கூடிய சத்தான உணவு வழங்குவதற்கு, தலா ஒரு நபருக்கு 250 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த நிதியை பயன்படுத்தி, சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், குறைந்த விலைக்கு தனியார் உணவகத்தில் சாப்பாடு பார்சல் வாங்கி கொடுத்து, கணிசமான பணத்தை ஆட்டை போடுகின்றனர்.
குறிப்பாக, வாலாஜாபாத் வட்டாரத்தில் இயங்கும் பரந்துார், அய்யன்பேட்டை, தென்னேரி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாகவும், சில நேரங்களில் கர்ப்பிணியருக்கு பற்றாக்குறையுடன் வழங்குவதாகவும், கர்ப்பிணியர் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தாமதம்
இந்த தில்லுமுல்லுவை மருத்துவ அலுவலரும், வட்டார மருத்துவ அலுவலரும், மாவட்ட கண்காணிப்பாளரும் கண்டுகொள்வதில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.
இதனால், சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணியர் சத்து குறைபாடு மற்றும் பலவீனம் அடைய வாய்ப்பு உள்ளது.
பரந்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணியர் சிலர் கூறியதாவது:
ரத்தப் பரிசோதனைக்கு காலையிலே செல்ல வேண்டும். அதனால், தனியார் உணவகத்தில் சிற்றுண்டியை முடித்து சுகாதார நிலையங்களுக்கு செல்கிறோம்.
பரிசோதனை முடிவு, மருத்துவ ஆலோசனை பெறுவதற்குள் மதியமாகிவிடும். அந்த நேரத்தில் உணவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
ஒரு நாளைக்கு 40 பேர் வருகிறோம் என்றால், 30 பேருக்கு தான் உணவு கிடைக்கிறது. மற்றவர்களுக்கு உணவு கிடைப்பதில்லை. கிடைக்கும் சாப்பாட்டிலும் சாதம் வேகாமல் அரைவேக்காடாக இருக்கிறது. பல நேரம் கீரை கூட்டு இருப்பதே இல்லை.
கரூர், சின்னையன்சத்திரம் உள்ளிட்ட நீண்ட துாரத்தில் இருந்து வருவோர், சாப்பாடு கிடைக்கும் என நம்பி இருக்கையில், கிடைக்காததால், பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, அரசு ஆரம்ப சுகாதார பணியாளர் ஒருவர் கூறியதாவது:
வட்டார மருத்துவ அலுவலர் தெரிவிக்கும் சாப்பாடு எண்ணிக்கை மட்டுமே வாங்கி கொடுக்கிறோம். சில நேரங்களில் கர்ப்பிணியரின் எண்ணிக்கை கூடிவிட்டால், மீண்டும் சாப்பாடு வாங்கி வர தாமதம் ஏற்பட்டு விடுகிறது.
முறைகேடு
அதற்குள் கர்ப்பிணியர் வீட்டுக்கு சென்று விடுகின்றனர். அதிகாரிகள் கூறுவதை நாங்கள் செய்கிறோம். எங்கள் மீது எந்த தவறும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார நலப் பணிகள் துணை இயக்குநர் செந்தில் கூறியதாவது:
சுகாதார நிலையத்திற்கு வரும் கர்ப்பிணியர் மற்றும் சுகாதார நிலையத்தில் பிரசவித்த பெண்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு நடப்பதாக கூறுவது முற்றிலும் பொய்.
ஏன் எனில், உணவு போடும் போது புகைப்படங்கள் அந்தந்த சுகாதார நிலையத்தில் இருந்து அனுப்பி விடுகின்றனர். இதுபோல இருக்கும் போது, எப்படி முறைகேடு நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.