/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் மகிழ்ச்சி! 9,388 விவசாயிகளுக்கு 126 கோடி ரூபாய் விடுவிப்பு
/
70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் மகிழ்ச்சி! 9,388 விவசாயிகளுக்கு 126 கோடி ரூபாய் விடுவிப்பு
70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் மகிழ்ச்சி! 9,388 விவசாயிகளுக்கு 126 கோடி ரூபாய் விடுவிப்பு
70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் மகிழ்ச்சி! 9,388 விவசாயிகளுக்கு 126 கோடி ரூபாய் விடுவிப்பு
ADDED : மே 06, 2024 03:38 AM

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழத்தின் வாயிலாக, 70 நிலையங்களில் 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், 9,388 விவசாயிகளுக்கு 126.21 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது என, அத்துறை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து தாலுகாக்களில், 1.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இதில், சம்பா பருவத்தில், 32,110 ஏக்கர் மற்றும் நவரை பருவத்தில், 51,870 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன.
சம்பா பருவத்தில் சாகுபடி செய்த நெல், மார்ச் மாதம் அறுவடை முடிந்துள்ளது. நவரை பருவத்தில், சாகுபடி செய்த நெல், ஏப்ரல், மே மாதம் துவக்கத்தில் அறுவடை முடிவடையும் தருவாயில் உள்ளது.
சம்பா மற்றும் நவரை பருவத்திற்கு சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு, நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாக, 1 கிலோ சன்ன ரக நெல்லுக்கு, 23.10 ரூபாய். பொது ரக நெல்லுக்கு, 22.65 ரூபாய் வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், சம்பா, நவரை பருவத்திற்கு அறுவடை செய்யும் நெல்லை கொள்முதல் செய்வதற்கு, 70 இடங்களில் அரசு நேரடி கொள் முதல் நிலையங்கள் துவக்கப்பட்டு உள்ளன.
இதில், 37 நேரடி கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டிலும், 33 தேசிய நுகர்வோர் கழக கூட்டமைப்பு நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்யப்படுகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில், 5.49 கோடி கிலோ நெல், கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்த நெல்லுக்கு, 126.21 கோடி ரூபாய் நுகர்பொருள் வாணிப கழகம் பணம் விடுவித்துள்ளது. இது, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னேரி விவசாயி கண்ணன் கூறியதாவது:
தனியார் நெல் வியாபாரிகளிடம், ஒரு மூட்டை 1,400 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
அதே நெல்லை சுத்தப்படுத்தி, அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தால், 1,850 ரூபாய் கிடைக்கிறது.
இந்த கூடுதல் 450 ரூபாய்க்கு விற்பனை செய்வது, விவசாயத்தில் ஏதேனும் ஒரு செலவு செய்வதற்கு சவுகரியமாக இருக்கிறது.
-இவ்வாறு அவர் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், பிப்ரவரி மாத இறுதியில், நெல் கொள்முதல் செய்யும் பணி துவக்கப்பட்டது. நேற்று முன்தினம் வரையில், 5.49 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, 9,388 விவசாயிகளுக்கு, 126.21 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஏப்., 28ம் தேதி வரையில் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணம், விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் கொள்முதல் செய்த நெல்லுக்கு, இந்த வாரத்தில் பணம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.