/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் நீதிமன்ற தடை தொடர்வதால் குவாரி திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை
/
காஞ்சியில் நீதிமன்ற தடை தொடர்வதால் குவாரி திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை
காஞ்சியில் நீதிமன்ற தடை தொடர்வதால் குவாரி திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை
காஞ்சியில் நீதிமன்ற தடை தொடர்வதால் குவாரி திறக்க வாய்ப்பில்லை: நீர்வளத்துறை
ADDED : மே 29, 2025 08:38 PM
காஞ்சிபுரம்:தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மணல் குவாரிகள் துவங்க, நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், நீதிமன்ற தடை தொடர்வதால், பாலாறு, செய்யாறு என, இரு ஆறுகளிலும் குவாரி திறக்க வாய்ப்பே இல்லை என, நீர்வளத் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் செயல்படும் கட்டுமான பணிகளுக்கு, வேலுார், திருவள்ளூர் மாவட்டங்களில் இயங்கிய மணல் குவாரிகளையே பெரிதும் நம்பியிருந்தனர்.
வேலுார், கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்ட மணல் குவாரிகளில், 2023ல் நடந்த அமலாக்கத் துறையினர் ரெய்டு காரணமாக, மணல் குவாரிகள் இன்று வரை செயல்படாததால், கட்டுமானத்துக்கு தேவையான மணல் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கட்டுமான பணிகள் அதிகம் நடக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு தேவைப்படும் மணல் கிடைக்காமல், எம்.சாண்ட் மணலை நம்பியிருக்க வேண்டியுள்ளது.
எம்.சாண்ட் விலை ஏற்றம் தொடர்பாகவும் பல்வேறு பிரச்னைகள் எழுந்ததால், கட்டுமான பொறியாளர்களும், வீடு கட்டுவோரும் பாதிப்படைந்தனர்.
தொழிற்சாலைகள் மிகுந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான யூனிட் மணல் கட்டுமானத்துக்கு தேவைப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல், மணல் கிடைக்காமல் வீடு கட்டுவோர் சிரமப்பட்டு வருகின்றனர். மணல் தட்டுப்பாடு ஒருபுறம் இருக்க, 'எம் -- சாண்ட்' எனப்படும் செயற்கை மணல் வியாபாரமும் அமோகமாக நடக்கிறது.
மணல் கிடைக்காததால், 'எம் --- சாண்ட்' விலையை மெல்ல உயர்த்துகின்றனர். ஒரு யூனிட் 'எம் -- சாண்ட்' மணல் விலை, 5,000 ரூபாய் வரை, இடத்துக்கு ஏற்ப விற்கப்பட்டு வருகிறது.
இதனால், வீடு கட்டுவோர் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மணல் குவாரிகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை உள்ளது. லாரி உரிமையாளர் தரப்பிலும், கலெக்டர் அலுவலகத்தில் மணல் குவாரி திறக்க வேண்டும் என, மனு அளித்திருந்தனர்
இந்நிலையில், தமிழகத்தில், 13 மாவட்டங்களில், புதிதாக மணல் குவாரிகள் திறப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.
மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி கேட்டுள்ள தமிழக அரசு, மணல் குவாரி திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
மணல் குவாரி திறக்க திட்டமிடப்பட்டுள்ள 13 மாவட்டங்களில், காஞ்சிபுரம் மாவட்டம் இல்லை என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில் திருவள்ளூர், வேலுார், திருச்சி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில், புதிய குவாரிகளுக்கான பணிகள் நடக்கின்றன. புதிய மணல் குவாரிகள் பட்டியலில், காஞ்சிபுரம் மாவட்டம் இடம் பெற வேண்டும் எனவும், மணல் குவாரிகள் வாயிலாக, கட்டுமானத்துக்கு தேவையான மணலை, சரியான விலையில் அரசு வழங்க வேண்டும் என, வீடு கட்டுவோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி திறப்பதற்கான வாய்ப்பு இல்லை. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பாக செயல்பட்ட மணல் குவாரி சம்பந்தமாக நீதிமன்ற வழக்குகள் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக தடை உத்தரவு உள்ளது.
நீர்வளத் துறையை பொறுத்தவரையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில், பாலாறு, செய்யாறு என, எந்த ஆற்றிலும் மணல் குவாரி திறப்பதற்கான சூழல் இல்லை.
திருவள்ளூர், வேலுார் ஆகிய மாவட்டங்களில் குவாரி திறக்க வாய்ப்புள்ளது. ஆனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில், மணல் குவாரி எதிர்பார்ப்போருக்கு வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ல் கலெக்டர் சஸ்பென்ட்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2013ல் நடந்த மணல் குவாரி முறைகேடு தொடர்பாக, அப்போதைய கலெக்டர் சித்திரசேனன் மற்றும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
அதோடு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மணல் குவாரி திறக்கப்படவே இல்லை. 10 ஆண்டுகளுக்கு மேலாக, குவாரி இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக மணல் குவாரியை செயல்படுத்த பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.
ஆனால், நீர்வளத்துறை கருத்துப்படி, பாலாறு, செய்யாறு என, இரு ஆறுகளிலும் குவாரி திறக்க வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.