/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் வடிகால்வாயில் மின் கேபிள் காஞ்சியில் துார்வாரும் பணி சுணக்கம்
/
மழைநீர் வடிகால்வாயில் மின் கேபிள் காஞ்சியில் துார்வாரும் பணி சுணக்கம்
மழைநீர் வடிகால்வாயில் மின் கேபிள் காஞ்சியில் துார்வாரும் பணி சுணக்கம்
மழைநீர் வடிகால்வாயில் மின் கேபிள் காஞ்சியில் துார்வாரும் பணி சுணக்கம்
ADDED : நவ 06, 2025 11:31 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயில், மின் கேபிள் செல்வதால், கால்வாயை துார்வாரும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனால், மூங்கில் மண்டபம் பகுதியில் மழைநீர் தேங்குகிறது என, மின்வாரியத்தினர் மீது, நெடுஞ்சாலைத் துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர், மஞ்சள் நீர் கால்வாயில் செல்லும் வகையில், சாலையின் இருபுறமும் நெடுஞ் சாலைத் துறை சார்பில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
மழைநீர் மட்டுமே வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இக்கால்வாயில், பலர் முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுத்து உள்ளனர்.
இந்நிலையில், வள்ளல் பச்சையப்பன் தெரு கிழக்கு பகுதியில், மழைநீர் வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், மூங்கில் மண்ட பம் சிக்னல் அருகில் குளம்போல மழைநீர் தேங்குகிறது.
நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் கொசுத்தொல்லை ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மழைநீர் வடிகால்வாயை துார்வாரும் பணிக்கு, கால்வாயில் செல்லும் மின் கேபிள் இடையூறாக உள்ளது என, நெடுஞ்சாலைத் துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெருவில், மழைநீர் வடிகால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை பொக்லைன் இயந்திரம் மூலம் நீக்க முயன்றோம்.
அப்போது, மழைநீர் கால்வாயில், மின்வாரியத்தினர், எச்.டி., எனப்படும் உயர் மின்னழுத்த மின் கேபிள் பதித்துள்ளது தெரியவந்தது. இதனால், கால்வாயை துார்வார முடியாத சூழல் உள்ளது. மின்வாரியத்தினர் மின் கேபிளை அகற்றினால்தான், கால்வாயை முழுமையாக துார்வாரி சீரமைக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து காஞ்சிபுரம் மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் தேரோடும் வீதிகளில் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வள்ளல் பச்சையப்பன் தெருவிலும் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
கால்வாய் துார்வாரும் பணிக்காக நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால்வாயை உடைத்தாலும், மின் ஒயர் செல்வதால், பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில், நான் உடனிருந்து பார்த்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

