/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை:குணகரம்பாக்கம் மடுவை பயன்படுத்த தடை
/
வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை:குணகரம்பாக்கம் மடுவை பயன்படுத்த தடை
வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை:குணகரம்பாக்கம் மடுவை பயன்படுத்த தடை
வெள்ளப்பெருக்கால் 12 கிராமத்தினருக்கு... எச்சரிக்கை:குணகரம்பாக்கம் மடுவை பயன்படுத்த தடை
ADDED : நவ 08, 2025 12:45 AM

காஞ்சிபுரம்: கம்பன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், குணகரம்பாக்கம் மடுவின் மீது தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. உயிர் பலி அபாயம் உள்ளதால், இந்த மடுவை பயன்படுத்த வேண்டாம் என, சுற்றியுள்ள 12 கிராமத்தினருக்கு, மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அணைக்கட்டு கிராமத்தில் இருந்து, தைப்பாக்கம், கூரம், பெரிய கரும்பூர், சிறுவாக்கம், பரந்துார், தண்டலம், ஏகனாம்புரம், மதுரமங்கலம் வழியாக ஸ்ரீபெரும்புதுார் ஏரியை அடையும், கம்பன் கால்வாய், 44 கி.மீ., உடையது.
இந்த கால்வாய் வழியாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய தாலுகாக்களில், 85 ஏரிகள் நிரம்புகின்றன. இதன் வாயிலாக, 22,235 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, பாலாற்றில், 1,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கம்பன் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குணகரம்பாக்கம் - செல்லம்பட்டிடை இடையே செல்லும் மடுவு மீது, வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, குணகரம்பாக்கம் மடுவு, 400 மீட்டர் நீளத்தை கடந்துவிட்டால் எளிதாக, மதுரமங்கலம் வழியாக சுங்குவார்சத்திரம் சென்றடையலாம். எடையார்பாக்கம், மேலேரி ஆகிய கிராமங்கள் வழியாக சுங்குவார்சத்திரம் செல்ல 3 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும்.
இதனால், சிறிதும் தயக்கம் காட்டாமல் வாகனங்களை தள்ளிக் கொண்டு, செல்லம்பட்டிடை, நரசிங்கபுரம், கோட்டூர் உள்ளிட்ட, 12 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் ஆபத்தான முறையில், குணகரம்பாக்கம் மடுவை கடந்து செல்கின்றனர். இதுபோன்ற நேரங்களில் நிலை தடுமாறி கவிழ்ந்தால், வெள்ள நீரில் வாகனம் அடித்து செல்வதோடு, உயிர் பலி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
கம்பன் கால்வாய் வெள்ள நீர், கோவிந்தவாடி, பரந்துார் ஆகிய ஏரிகளின் உபரி நீர் குணகரம்பாக்கம் மடுவு வழியாக, 1 அடி உயரத்திற்கு வெள்ள நீர் சென்று, கூவம் ஆற்றில் கலக்கிறது.
இந்த மடுவில் பொது மக்கள் யாரும் குளிக்க வேண்டாம். ஆபத்தான முறையில் கடக்க வேண்டாம். ஆடு, மாடுகளை ஓட்டி செல்ல வேண்டாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, குணகரம்பாக்கம் கிராம மக்கள் கூறியதாவது:
கம்பன் கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, குணகரம்பாக்கம் தரைப்பாலத்தின் மீது அளவுக்கு அதிகமாக தண்ணீர் செல்கிறது.
எனவே, அதிகாரிகள் தான் உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நீர் வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பரந்துார் விமான நிலைய திட்டத்திற்கு, 7 கி.மீ., துாரம் நீர்வரத்து கால்வாய், மாற்றுவழித் தடத்தில் எடுத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், அங்கு உயர் மட்ட பாலம் கட்ட நாங்கள் பரிந்துரைக்கவில்லை.
இருப்பினும், புதிய கால்வாய் அமைத்தபின், அவசியம் ஏற்பட்டால், உயர்மட்ட பாலம் கட்ட பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்றும் செய்ய முடியாது ''நான் சில மாதங்களுக்கு முன்தான், வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்றேன். குணகரம்பாக்கம் தரைப்பாலம் கட்ட ஏதேனும் திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பி உள்ளார்களா என, தெரியவில்லை. இருப்பினும், நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கால்வாய் என்பதால், அவர்கள் தான் செய்ய வேண்டும். எங்கள் துறை ஒன்றும் செய்ய முடியாது.
- முத்து கணபதி, வட்டார வளர்ச்சி அலுவலர், ஸ்ரீபெரும்புதுார்.

