/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வேகமாக பெருகும் தெரு நாய்களால் காஞ்சியில்... தீராத தொல்லை; ஆண்டுக்கு 3,000 பேர் பாதிப்பு; விழிக்குமா மாநகராட்சி?
/
வேகமாக பெருகும் தெரு நாய்களால் காஞ்சியில்... தீராத தொல்லை; ஆண்டுக்கு 3,000 பேர் பாதிப்பு; விழிக்குமா மாநகராட்சி?
வேகமாக பெருகும் தெரு நாய்களால் காஞ்சியில்... தீராத தொல்லை; ஆண்டுக்கு 3,000 பேர் பாதிப்பு; விழிக்குமா மாநகராட்சி?
வேகமாக பெருகும் தெரு நாய்களால் காஞ்சியில்... தீராத தொல்லை; ஆண்டுக்கு 3,000 பேர் பாதிப்பு; விழிக்குமா மாநகராட்சி?
UPDATED : ஆக 06, 2025 10:15 PM
ADDED : ஆக 06, 2025 10:13 PM

காஞ்சிபுரம்:காஞ்சி மாநகரில் தெரு நாய்களின் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 3,000 பேருக்கு மேல் நாய் கடியால் பாதிக்கப்பட்டு வருவதால், மாநகராட்சி விழிப்படைந்து, கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியோ, தொண்டு நிறுவனத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம் என, சமாளித்து வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின் 51 வார்டுகளிலும், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தெரு நாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது 4,000க்கும் அதிகமான தெரு நாய்கள் இருப்பது தெரியவந்தது.
![]() |
இதை தொடர்ந்து, தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொள்ளும் என, மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், திருக்காலிமேடில் நாய் இன கருத்தடை மையம் மட்டும் அமைக்கப்பட்டது. அறுவை அரங்கு, கால்நடை மருத்துவருக்கு தேவையான இடவசதி, அறுவை சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்தவில்லை. இதனால், தெரு நாய்களை பிடித்து கருத்தடை சிகிச்சை செய்ய முடியாமல் போனது.
தடுப்பூசி இதையடுத்து, பிள்ளையார்பாளையம், திருக்காலிமேடு, செவிலிமேடு, ஓரிக்கை உள்ளிட்ட பகுதிகளில், ஒரே தெருவில் 25க்கும் மேற்பட்ட நாய்கள் அதிகரித்தன.
தெருநாய்கள், சிறுவர்கள், முதியோர் மற்றும் பெண்களை துரத்தி கடிக்கும் சம்பவங்கள், காஞ்சிபுரத்தின் அனைத்து பகுதிகளில் அன்றாடம் நடக்கின்றன.
குறிப்பாக கடைகளுக்கு செல்லும் சிறுவர் - சிறுமியர், நடைபயிற்சிக்கு செல்வோர், இரவில் பணி முடித்து வீடு திரும்புவோர் என, பலரையும் நாய்கள் கடித்து காயப்படுத்துகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சியில் மட்டும், ஆண்டுக்கு சராசரியாக 3,000க்கும் மேற்பட்டோர், நாய்கடியால் பாதிக்கப்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை பெற்றுள்ளனர்.
தெரு நாய்கள் தொல்லையால் பாதிக்கப்படும் பகுதிமக்கள், அந்தந்த பகுதி கவுன்சிலரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். நாய்கடிக்கு என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என கேட்டு வாக்குவாதம் செய்வதால், கவுன்சிலர்கள் பதில் தெரியாமல் முழிக்கின்றனர்.
இதையடுத்து கவுன்சிலர்களும், தெரு நாய் தொல்லை குறித்து மாநகராட்சி கூட்டத்தில் முன்வைத்து தொடர்ந்து விவாதித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 4,000 மாக இருந்த தெரு நாய்கள் எண்ணிக்கை, தற்போது 6,000ஐ கடந்துள்ளது. இதனால், தெரு நாய்கள் தொல்லையும் பல பகுதிகளில் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லையை தடுக்காமல் மாநகராட்சி அலட்சியம் காட்டுவதாக, பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
கருத்தடை சிகிச்சை மாநகராட்சியின் சுகாதாரப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை சிகிச்சை முடிந்து, மூன்று நாட்கள் அவற்றை பத்திரமாக பார்த்து கொள்ள வேண்டும். பின், 'ரேபீஸ்' தடுப்பூசி செலுத்தி, பிடித்த இடத்திலேயே அவற்றை விடவேண்டும். இதற்காக மாநகராட்சிக்கு ஒரு நாய்க்கு 1,650 ரூபாய் செலவாகும்.
எனினும், செலவினங்களை பார்க்காமல், பகுதிமக்கள் நலனுக்காக, திருக்காலிமேடில் உள்ள நாய்கள் கருத்தடை மையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. 25 லட்சம் ரூபாய் மதிப்பில், தண்ணீர் வசதிக்காக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, டைல்ஸ் பதிப்பு, நாய்களுக்கான சிகிச்சை அறை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. கால்நடைகள் பராமரிப்புத்துறை சார்பில், நாய்கள் கருத்தடை சிகிச்சைக்கு, தொண்டு நிறுவனத்துடன் தொடர்ந்து பேசி வருகிறோம்.
சிகிச்சைக்கு தேவையான டேபிள் உள்ளிட்ட சில உபகரணங்கள் வர வேண்டியுள்ளது. மற்றபடி அனைத்து வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் மாதமே, மாநகராட்சியில் உள்ள 6,000 தெருநாய்களை பிடித்து, அனைத்திற்கும் கருத்தடை சிகிச்சை அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.