/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க தயக்கம்! ஒரு யூனிட் உற்பத்திக்கு 10 ரூபாய் செலவாகும்
/
எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க தயக்கம்! ஒரு யூனிட் உற்பத்திக்கு 10 ரூபாய் செலவாகும்
எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க தயக்கம்! ஒரு யூனிட் உற்பத்திக்கு 10 ரூபாய் செலவாகும்
எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைக்க தயக்கம்! ஒரு யூனிட் உற்பத்திக்கு 10 ரூபாய் செலவாகும்
ADDED : பிப் 21, 2024 12:35 AM
சென்னை:சென்னை எண்ணுாரில் 288 மெகா வாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்க, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு எரிபொருளாக, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு பயன்படுத்தப்பட உள்ளதால், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு 10 ரூபாயாக இருக்கும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, அரசு முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறது.
சென்னை எண்ணுாரில், மின் வாரியத்திற்கு அனல் மின் நிலையம் இருந்தது. இது, மூடப்பட்டதை அடுத்து, அங்கு எரிவாயு மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு அலகிலும் தலா 18 மெகாவாட் முதல் 20 மெகாவாட் என, மொத்தம், 2,000 மெகாவாட் திறனில் எரிவாயு மின் நிலையம் அமைக்கப்பட உள்ளதாக, 2021ல் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எரிபொருளான இயற்கை எரிவாயு, இந்தியன் ஆயில் நிறுவனம் எண்ணுாரில் அமைத்துள்ள திரவ நிலை எரிவாயு முனையத்தில் இருந்து, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு பெறுவதற்கும் திட்டமிடப்பட்டது.
எண்ணுாரில் எரிவாயு மின் நிலையம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்த நிறுவனம் வாயிலாக விரிவான திட்ட அறிக்கையை மின் வாரியம் தயாரித்தது.
இதன்படி தலா 18 மெகா வாட் உற்பத்தி செய்யும் வகையில், 16 அலகுகள் உடைய மின் நிலையம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த பரிந்துரையை தமிழக அரசிடம் முன்வைத்து, கடந்த ஆண்டு இறுதியில் மின்வாரியம் அனுமதி கேட்டது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
எண்ணுார் எரிவாயு மின் நிலையம் அமைக்க, 2,900 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு, எரிபொருளாக பயன்படுத்தினால், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு 10 ரூபாய் வரை இருக்கும். அதேசமயம், அனல் மின் உற்பத்தி, ஒரு யூனிட் 5 ரூபாய்க்கு கீழ் கிடைக்கிறது.
எனவே, அதிக முதலீடு செய்வதுடன், மின் உற்பத்தி செலவும் அதிகம் ஏற்படும். இதனால், எண்ணுார் மின் திட்ட விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் முன், பல கட்ட ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.

