/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மருத்துவன்பாடி ஏரி கால்வாய் சீரமைப்பு
/
மருத்துவன்பாடி ஏரி கால்வாய் சீரமைப்பு
ADDED : அக் 05, 2025 12:58 AM

உத்திரமேரூர்:பருவமழை முன்னெச்சரிக்கையாக, மருத்துவன்பாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை, நீர்வளத்துறையினர் துார்வாரி சீரமைத்தனர்.
உத்திரமேரூர் ஒன்றியம், திருப்புலிவனம் ஏரியில் இருந்து மருத்துவன்பாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாய் உள்ளது. பருவ மழை காலங்களில், இந்த கால்வாய் மூலமாக, திருப்புலிவனம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், மருத்துவன்பாடி ஏரியில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர்வரத்து கால்வாய், முறையாக பராமரிப்பு இல்லாமல் இருந்தது. கால்வாய் மண் துார்ந்தும் செடி, கொடிகளும் வளர்ந்திருந்தன.
இதனால், பருவமழை நேரங்களில், கால்வாய் வழியாக செல்லும் உபரிநீர், அருகிலுள்ள விளைநிலங்களில் சூழ்ந்ததால், நெல், கரும்பு பயிர்கள் சேதமடைந்து, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க, நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள், மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
அதையடுத்து, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், நீர்வளத்துறையினர் உத்திரமேரூர் அதிகாரிகள், மருத்துவன்பாடி ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை துார்வாரி சீரமைத்துள்ளனர். நீர் தடையின்றி செல்ல வழி ஏற்படுத்தி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.