/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வாலாஜாபாத் - பூந்தமல்லி பேருந்து இயக்க கோரிக்கை
/
வாலாஜாபாத் - பூந்தமல்லி பேருந்து இயக்க கோரிக்கை
ADDED : டிச 28, 2024 08:20 PM
வாலாஜாபாத்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகர் பகுதியாக வாலாஜாபாத் உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களுக்கு நடுவே வாலாஜாபாத் அமைந்துள்ளது. இந்த பேரூராட்சியில், 20,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமத்தினர், வாலாஜாபாதில் இருந்து பேருந்து பிடித்து, ஒரகடம், தாம்பரம், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். எனினும், வாலாஜாபாதில் இருந்து, பூந்தமல்லி செல்ல நேரடி பேருந்து வசதி இல்லை.
இதனால், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இருங்காட்டுக்கோட்டை பகுதி தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், சுங்குவார்சத்திரம் அல்லது ஒரகடம் சென்று, அங்கிருந்து பேருந்து பிடித்து பூந்தமல்லி செல்லும் நிலை உள்ளது.
மேலும், வாலாஜாபாதில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்வதற்கும் போதுமான பேருந்து வசதி இல்லை. இதனால், வாலாஜாபாதில் இருந்து தென்னேரி வரை ஆட்டோ வாயிலாக பயணித்து, அங்கிருந்து சுங்குவார்சத்திரம் வரை மீண்டும் ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், கூடுதல் பண செலவு மற்றும் நேரம் விரயமாகிறது.
எனவே, பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்து சேவையை, வாலாஜாபாத் வரை நீட்டிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.