/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலவாக்கம் வழியாக பஸ் இயக்க கோரிக்கை
/
சாலவாக்கம் வழியாக பஸ் இயக்க கோரிக்கை
ADDED : பிப் 11, 2025 07:56 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள மல்லியங்கரணை, தோட்டநாவல், கடல்மங்கலம், எஸ்.மாம்பாக்கம், சிறுபினாயூர் ஆகிய கிராமங்களில் பேருந்து சேவை இல்லாமல் உள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்தோர், தினமும் கல்லூரி, மருத்துவமனை உள்ளிட்டவற்றுக்காக, செங்கல்பட்டுக்கு சென்று வருகின்றனர்.
இங்கு, பேருந்து சேவை இல்லாததால், உத்திரமேரூர் -- புக்கத்துறை நெடுஞ்சாலைக்கு நடந்து வந்து, அங்கிருந்து பேருந்து வாயிலாக செங்கல்பட்டுக்கு செல்கின்றனர். அவ்வாறு பேருந்து பிடிக்க நீண்ட தூரத்தில் இருந்து வருவோர், வெயில் மற்றும் மழை நேரங்களில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
தற்போது, உத்திரமேரூரில் இருந்து நெல்வாய் கூட்டுச்சாலை, புக்கத்துறை வழியாக செங்கல்பட்டுக்கு தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் உத்திரமேரூரில் இருந்து மல்லியங்கரணை, கடல்மங்கலம், குண்ணவாக்கம் கூட்டு சாலை, சாலவாக்கம், சிறுபினாயூர் வழியாக செங்கல்பட்டுக்கு பேருந்துகளை இயக்க, நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வருகிறது.
எனவே, உத்திரமேரூரில் இருந்து சாலவாக்கம் வழியே செங்கல்பட்டுக்கு பேருந்து சேவையை துவக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.