/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கரும்பு சாகுபடிக்கு முழு மானியத்தில் விதைக்கரணை வழங்க கோரிக்கை
/
கரும்பு சாகுபடிக்கு முழு மானியத்தில் விதைக்கரணை வழங்க கோரிக்கை
கரும்பு சாகுபடிக்கு முழு மானியத்தில் விதைக்கரணை வழங்க கோரிக்கை
கரும்பு சாகுபடிக்கு முழு மானியத்தில் விதைக்கரணை வழங்க கோரிக்கை
ADDED : ஆக 04, 2025 11:40 PM
சாத்தணஞ்சேரி,கரும்பு சாகுபடிக்கு முழு மானியத்தில் விதைக்கரணை வழங்க, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், சீட்டணஞ்சேரி கரும்பு மண்டல விவசாயிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று, சாத்தணஞ்சேரியில் நடந்தது.
உறுதி மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் குமரேஸ்வரி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 72 கரும்பு விவசாயிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் விவசாயி கள் வலியுறுத்திய கோரிக்கைகள் வருமாறு:
கரும்பு சாகுபடிக்கு 4 அடி இடைவெளியில் உழவு செய்தல், கரும்பு நடவுக்கு மண்கொட்டி சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான இயந்திரங்களை, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டுகளில் வழக்கத்தில் இருந்த களையெடுப்பு பணிக்கு ஆலை நிர்வாகம் கூலி வழங்கும் முறையை, மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
கரும்பு தோகை உரிக்கும் தொழிலாளர்களுக்கு கூலி வழங்க, விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் முன் பணம் வழங்க வேண்டும்.
கரும்பு வெட்டும் ஆட்களுக்கு ஆலை நிர்வாகம் மூலம் கூலி வழங்கப்பட்டு, அத்தொகையை விவசாயிகளுக்கான கரும்பு பணத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு கரும்பு விவசாயிகள் கோரிக்கைகைளை வலியுறுத்தினர்.
இதை தொடர்ந்து பேசிய மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் குமரேஸ்வரி, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
வலியுறுத்தல் மேலும், அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் சர்க்கரைத் துறையின் சிறப்பு திட்டங்கள் குறித்தும், கரும்பு விவசாயிகளுக்கான சலுகைகள் குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.
'நடப்பாண்டில், சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கு, மாநில அரசு மூலம் வழங்கப்படும் ஊக்கத்தொகை 349 ரூபாயுடன் சேர்த்து, 1,000 கிலோ கரும்புக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும்' என, அவர் தெரிவித்தார்.
எனவே, விவசாயிகள் அதிக அளவிலான நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்ய முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பெருக்க அலுவலர் ஜெகதீசன், சீட்டணஞ்சேரி கோட்டம் கரும்பு அலுவலர் ஹாசன் அப்துல் காதர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.