/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கைவிடப்பட்ட கல் குவாரிக்கு வேலி அமைக்க கோரிக்கை
/
கைவிடப்பட்ட கல் குவாரிக்கு வேலி அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 08, 2025 11:36 PM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது குண்ணவாக்கம் கிராமம். இக்கிராமத்தில் இருந்து, வாலாஜாபாத்- தாம்பரம் பிரதான சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது.
இச்சாலையோர பகுதியில், கடந்த ஆண்டுகளில் அரசு அனுமதி பெற்ற தனியார் கல் குவாரி இயங்கியது.
அக்கல் குவாரிக்கான செயல்பாட்டு காலம் முடிந்ததையடுத்து, தற்போது காலாவதியான கைவிடப்பட்ட கல் குவாரியாக உள்ளது.
பயன்பாடற்ற இந்த கல் குவாரியின் பெரிய பள்ளத்தில், மழைக்காலத்தின் போது தண்ணீர் நிரம்பி கோடைக் காலங்களிலும் வற்றாமல் காணப்படுகிறது.
இவ்வாறு தண்ணீர் நிரம்பிய இச்சாலையோர குவாரி, எவ்வித பாதுகாப்புமின்றி, திறந்தவெளியாகவும், அபாயகரமான பள்ளமாகவும், விபத்து ஏற்படுத்தும் நீர் தேக்க பகுதியாகவும் காணப்படுகிறது.
கைவிடப்பட்ட இந்த கல் குவாரியை சுற்றிலும் மேய்ச்சல் பகுதியாக உள்ளதால், மேய்ச்சலின் போது கால்நடைகள் தவறி விழாமல் பாதுகாக்க கால்நடை பராரமரிப்போர் மிக கவனமாக இருக்க வேண்டியுள்ளது.
மேலும், இப்பகுதி சாலை வழியாக பள்ளி, கல்லுாரிக்கு சென்று வரும் மாணவ, மாணவியர் விளையாட்டு தனமாக இக்குவாரி பள்ளத்தில் இறங்கி விடக்கூடும் என பெற்றோர் அச்சப்படுகின்றனர்.
எனவே, கைவிடப்பட்ட இக்குவாரி பள்ளத்தால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க சுற்றி பாதுகாப்பு வேலி அமைப்பதோடு, குவாரி பள்ளத்தில் பல அடி ஆழத்திற்கு வீணாக தேங்கி கிடக்கும் தண்ணீரை பயன்பாடுக்கு ஏற்ற வகையில் திட்டமிட வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

