/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கனிம வள குவாரி வாயிலாக வருவாய்...ரூ.18.53 கோடி:38 ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு
/
கனிம வள குவாரி வாயிலாக வருவாய்...ரூ.18.53 கோடி:38 ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு
கனிம வள குவாரி வாயிலாக வருவாய்...ரூ.18.53 கோடி:38 ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு
கனிம வள குவாரி வாயிலாக வருவாய்...ரூ.18.53 கோடி:38 ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு
ADDED : செப் 28, 2024 12:02 AM

காஞ்சிபுரம்:மாவட்டத்தில், கனிம வள குவாரிகள் வாயிலாக, நடப்பாண்டில் மட்டும் 18.53 கோடி ரூபாய் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. இதை, 38 ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு, ஊரக வளர்ச்சி துறை ஒதுக்கீடு செய்து உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இதில், பழையசீவரம், ஆற்பாக்கம், பழவேலி, திருமுக்கூடல், பினாயூர், கரணை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கனிம வளம் என, அழைக்கப்படும் பூமிக்கடியில் இருந்து பாறைகளை வெடிவைத்து உடைத்து எடுக்கின்றனர்.
அவ்வாறு பிரித்தெடுத்த கற்களை, பல வித அளவுகளாக தரம் பிரித்து, அரவை செய்து விற்பனை செய்கின்றனர். இதன் வாயிலாக, குவாரி உரிமையாளர்கள் கோடி கணக்கில் பணத்தை வருவாய் ஈட்டுகின்றனர்.
குவாரி குத்தகை எடுத்த உரிமையாளர்களிடம், 30 சதவீதம், 10 சதவீதம் மாவட்ட கனிம வள அறக்கட்டளைக்கு என மொத்தம், 40 சதவீத கட்டணத்தை, மாவட்ட கனிம வள அறக்கட்டளை நிர்வாகம் வசூலிக்கிறது.
இந்த நிதியில், சுரங்கம் மற்றும் குவாரிகளால் பாதிக்கப்படும் இடங்களில், அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்களுக்கு, குடிநீர், சுகாதாரம், கல்வி, பெண்கள் மற்றும் குழந்தை நலன், வயது வந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலன், திறன் மேம்பாடு ஆகிய வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது.
அதன்படி, 2018 - 19ம் ஆண்டு, 60 லட்ச ரூபாய் செலவில், 10 பணிகள் செய்யப்பட்டன. 2019 - 20ம் நிதி ஆண்டில், 5 கோடி ரூபாய் செலவில், ஐந்து பணிகள் செய்யப்பட்டன.
அதேபோல, 2020 - 21 நிதி ஆண்டில், 5.56 கோடி ரூபாய் செலவில், 26 பணிகள் என, 41 பணிகளுக்கு, 11.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
கடந்த, 2021 - 22ம் ஆண்டு மற்றும் 2022- - 23 ஆகிய இரு ஆண்டுகளுக்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, வளர்ச்சி பணிகளை நிறைவு செய்யப்பட்டு உள்ளன.
நடப்பாண்டில், கனிம வள குவாரிகளின் வாயிலாக, 18.53 கோடி ரூபாய் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு, ஏப்ரல் முதல், நடப்பாண்டு மார்ச் மாதம் முடிய, சிறு கனிம வள குவாரிகளின் வாயிலாக, மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் கிடைத்துள்ளது.
இந்த வருவாயை பயன்படுத்தி, கனிம வளம் பாதிக்கப்பட்ட 38 ஊராட்சிகளில் வளர்ச்சி வளர்ச்சி பணிகளை செய்துக் கொள்ளலாம் என, ஊரக வளர்ச்சி துறை திட்டமிட்டுள்ளது.
இதன் வாயிலாக, குவாரிகளால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் கூடுதல் வசதிகள் கிடைக்கும் என, நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
காஞ்சிபுரம் மாவட்ட குவாரிகள் வாயிலாக, நடப்பாண்டில் 18.53 கோடி ரூபாய் ஊராட்சிகளுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்த வருவாய் நிதியை, 38 ஊராட்சிகளின் சாலை, குடிநீர், அங்கன்வாடி மைய கட்டடம் உட்பட வளர்ச்சி பணிகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகளுக்கு, கலெக்டர் தலைமையில் இயங்கும் கனிம வள அறக்கட்டளை நிர்வாக குழு ஒப்புதல் பெற்ற பின், ஊராட்சி தலைவர்கள் வளர்ச்சி பணிகளை செய்ய அனுமதி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.