/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
தனியார் கடைகளில் விலை உயர்வால் அரசு சிமென்ட்டிற்கு தட்டுப்பாடு வீடு கட்டும் பயனாளிகள் இடையே புலம்பல் அதிகரிப்பு
/
தனியார் கடைகளில் விலை உயர்வால் அரசு சிமென்ட்டிற்கு தட்டுப்பாடு வீடு கட்டும் பயனாளிகள் இடையே புலம்பல் அதிகரிப்பு
தனியார் கடைகளில் விலை உயர்வால் அரசு சிமென்ட்டிற்கு தட்டுப்பாடு வீடு கட்டும் பயனாளிகள் இடையே புலம்பல் அதிகரிப்பு
தனியார் கடைகளில் விலை உயர்வால் அரசு சிமென்ட்டிற்கு தட்டுப்பாடு வீடு கட்டும் பயனாளிகள் இடையே புலம்பல் அதிகரிப்பு
ADDED : ஜூன் 04, 2025 11:43 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், மத்திய அரசு பிரதமர் வீடு வழங்கும் திட்டம், பி.எம்., ஜன்மன் மற்றும் மாநில அரசின் கனவு இல்லம், பழங்குடியினத்தவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தி வருகின்றன.
குற்றச்சாட்டு
மாநில அரசு திட்டத்தில் தேர்வாகி இருக்கும் பயனாளிகளுக்கு, ஒரு மூட்டை சிமென்ட் 285 ரூபாய்க்கு என, 140 மூட்டைகள் சிமென்ட் மற்றும் 320 கிலோ கம்பி வழங்கப்படுகிறது.
மத்திய அரசின் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்திற்கும், அதே விலையில் 100 மூட்டை சிமென்ட் மற்றும் 320 கிலோ கம்பி வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் எம்-.சாண்ட், ஜல்லி ஒரு யூனிட்டிற்கு 1,500 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், தனியார் சிமென்ட் விற்பனை நிலையங்களில், 300 ரூபாய்க்கு விற்பனையான சிமென்ட் விலை தற்போது, 340 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதனால், தனியார் சிமென்ட் கடைகளில் பயனாளிகள் சிமென்ட் மூட்டை எடுப்பதை தவிர்த்து விட்டு, அரசு திட்டத்தில் வழங்கும் சிமென்ட் மூட்டை எடுக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில், சிமென்ட் மூட்டை எடுக்க பயனாளிகள் செல்லும் போது, சிமென்ட் மூட்டைக்கு தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதாகவும், சிமென்ட் மூட்டைகள் பெற முன் பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாகவும் பயனாளிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அலை கழிப்பு
மேலும், மத்திய, மாநில அரசு திட்டங்களில் வீடு கட்டுவோர் சிமென்ட் மூட்டைகள் எடுத்து செல்வதற்கு அலை கழிக்க வைப்பதாக பயனாளிகள் இடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, அரசு திட்டங்களில் வீடு கட்டுவோருக்கு தட்டுப்பாடு இன்றி சிமென்ட் மூட்டைகள் வழங்க சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அரசு வினியோகம் செய்யும் சிமென்ட் மூட்டைகளின் எண்ணிக்கை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு குறைவாகவே வினியோகம் செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மற்றும் நடப்பாண்டு வீடு கட்டும் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமென்ட் மூட்டைகள் வழங்கி வருகிறோம்.
பதிவு செய்த பயனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் சிமென்ட் மூட்டைகள் வழங்கப்படும். வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.