ADDED : ஜூலை 23, 2025 12:49 AM

ஸ்ரீபெரும்புதுார்:மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், போந்துார் அடுத்த, தெரேசாபுரத்தில் இருந்து, வளத்தாஞ்சேரி, கண்ணத்தாங்கல் செல்லும் சாலை பிரிந்து செல்கிறது. சுற்றுவட்டார கிராமத்தினர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில், வளத்தாஞ்சேரி அருகே மண் அரிப்பால் சாலையோரம் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், எதிரே வரும் கனரக வாகனத்திற்கு வழிவிட ஒதுங்கும் போது, சாலையோரம் உள்ள பள்ளத்தால் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையோர பள்ளத்தில் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்ப வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.