/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
எலைட் டாஸ்மாக் கடையில் ரூ.1.37 கோடி முறைகேடு
/
எலைட் டாஸ்மாக் கடையில் ரூ.1.37 கோடி முறைகேடு
ADDED : டிச 27, 2024 07:52 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில், 93 டாஸ்மாக் கடைகள், 42 மதுக்கூடங்கள் இயங்கி வருகின்றன.
இதில், செங்கல்பட்டு மாவட்டம் நாவலுார் பகுதியில், 4601 என்ற வெளிநாடு மது விற்பனை செய்யும் 'எலைட்' டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு, தினமும் 20 லட்சம் ரூபாய் வரை மதுபாட்டில்கள் விற்பனையாகின்றன.
நேற்று முன்தினம், காஞ்சிபுரம் மண்டல டாஸ்மாக் மேலாளர் பன்னீர்செல்வம் தலைமையில், டாஸ்மாக் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர். அப்போது, விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர் உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்கள், மது விற்பனை செய்த 1.37 கோடி ரூபாயை வங்கிக்கு செலுத்தவில்லை என்பது தெரியவந்தது.
தினமும் விற்பனையை சரிபார்க்கும் டாஸ்மாக் கடையில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்திருப்பது, துறை ரீதியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:
'எலைட்' மதுவிற்பனை கடையில், முறைகேடு குறித்து விசாரணை நடந்து வருகிறது. கையாடல் செய்த பணத்தை காட்டிலும், இரு மடங்கு பணம், ஜி.எஸ்.டி.,யை சேர்த்து மொத்தமாக செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், காவல் நிலையத்தில் துறை ரீதியாக புகார் அளிக்க பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.