/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
4 மேம்பாலங்களுக்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு மாநில சிறப்பு நிதி பணிகளுக்கு நிர்வாக அனுமதி
/
4 மேம்பாலங்களுக்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு மாநில சிறப்பு நிதி பணிகளுக்கு நிர்வாக அனுமதி
4 மேம்பாலங்களுக்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு மாநில சிறப்பு நிதி பணிகளுக்கு நிர்வாக அனுமதி
4 மேம்பாலங்களுக்கு ரூ.18 கோடி ஒதுக்கீடு மாநில சிறப்பு நிதி பணிகளுக்கு நிர்வாக அனுமதி
UPDATED : ஜூலை 28, 2025 08:00 AM
ADDED : ஜூலை 27, 2025 09:55 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நான்கு மேம்பாலங்கள் கட்டுவதற்கு, 18.92 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மாநில சிறப்பு நிதி ஒதுக்கீடு 1 திட்டத்தின் கீழ் செய்யப்படும் பணிகளுக்கு, ஊரக வளர்ச்சி துறையினர் நிர்வாக அனுமதி அளித்துள்ளனர். காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய உதவிக்கோட்டங்கள் உள்ளடக்கிய காஞ்சிபுரம் நெடுஞ்சாலை துறை கோட்டங்கள் இயங்கி வருகின்றன.
சாலை சீரமைப்பு இவை அனைத்தும், காஞ்சிபுரம் கலெக்டரேட் அலுவலக பின்புறம் பகுதியில் இயங்கி வரும், நெடுஞ்சாலை துறை கோட்ட அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதில், 1,122 கி.மீ., சாலைகள் மட்டுமே உள்ளன.
கிராமப்புறங்களில் இருக்கும் சாலைகளில், வாகன பயன்பாடு அதிகரிப்பு மற்றும் நெரிசலை குறைக்கும் பொருட்டு, சாலை விரிவாக்கம் மற்றும் புதிய பாலம் கட்டும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.
தவிர, காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய ஐந்து ஊராட்சி ஒன்றியங்களில், 596 கி.மீ., கிராமப்புற சாலைகள் மற்றும், 400 கி.மீ., வட்டார வளர்ச்சி அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒன்றிய சாலைகள் என, மொத்தம் 996 கி.மீ., சாலைகள் உள்ளன.இந்த சாலைகள் சேதம் ஏற்பட்டால், பிரதமர் மேம்பாட்டு திட்ட சாலைகள்; முதல்வரின் சாலைகள் மேம்பாடு திட்டம்; மாநில உபரி நிதியில் சாலைகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் சாலைகள் சீரமைக்கின்றனர்.
இருப்பினும், பிரதான நீர்வரத்துக் கால்வாய்கள் குறுக்கே பாலம் கட்டுவதற்கு கோடிக்கணக்கில் நிதி செலவாகும் என்பதால், உள்ளாட்சி அமைப்புகளில் நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
எனினும், ஊரக வளர்ச்சி துறையினர், தேசிய ஊரக வேளாண் வளர்ச்சி என, அழைக்கப்படும் நபார்டு திட்டத்தில் பாலங்கள் கட்டப்படுகின்றன. இருந்த போதிலும், சில மேம்பாலங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு கிடைப்பதில்லை. நடப்பாண்டு முதல், மாநில சிறப்பு நிதி ஒதுக்கீடு - 1 திட்டத்தின்கீழ், மேம்பாலங்கள் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
சிறப்பு அனுமதி அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர் ஆகிய மூன்று ஒன்றியங்களில், நான்கு மேம்பாலங்கள் கட்டுவதற்கு அரசு 18.92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதிக்குரிய பணி ஆணைகளை ஊரக வளர்ச்சி துறை சமீபத்தில் வழங்கியுள்ளது.
இதன் மூலமாக, நீண்ட காலமாக மேம்பாலம் கேட்டு காத்திருக்கும் பகுதிகளுக்கு மேம்பாலம் கிடைக்கும் என, நம்பிக்கை எழுந்துள்ளது. இது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரிய பெரிய திட்ட மதிப்பீட்டில் கட்டப்படும் பாலங்களை நபார்டு திட்டத்தில் கட்டி வந்தோம். இருந்தாலும், ஒரு சில மேம்பாலங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்க முடியாத சூழ்நிலை இருந்தது.
தற்போது, மாநில சிறப்பு நிதி ஒதுக்கீடு 1 திட்டத்தின் கீழ், மேம்பாலங்கள் கட்டுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நம் மாவட்டத்தில், 5 கி.மீ., நான்கு மேம்பாலம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் இறுதியில், டெண்டர் விடப்பட உள்ளது. கட்டுமான பணிகள் துவங்கி, 12 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.