/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
களை கட்டிய ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை
/
களை கட்டிய ஆயுத பூஜை பொருள்கள் விற்பனை
ADDED : அக் 10, 2024 11:01 PM

காஞ்சிபுரம்,:ஆயுத பூஜையையொட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலை, செங்கழுநீரோடை வீதி, புத்தேரி தெரு, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக பொரி கடலை கடை, பழக்கடை, பூசணி, வாழைமரக்கன்று, அலங்கார தோரணம், எலுமிச்சை உள்ளிட்ட கடைகளில் பூஜைக்கு தேவையான பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன.
பெரும்பாலான அரசு அலுவலகங்கள் மற்றும் சில தனியார் அலுவலகங்களில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டதால், நிரந்தர கடைகளிலும், தற்காலிக கடைளிலும் நேற்று விற்பனை களை கட்டியது.
காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் நடப்பு ஆண்டு பூசணி விளைச்சல் அதிகரித்துள்ளதால், கடந்த வாரம் கிலோ 25 ரூபாயக்கு விற்கப்பட்ட பூசணி, நேற்று, கிலோ 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கடந்த வாரம் 250 கிராம் எலுமிச்சை பழம், 30 ரூபாய்க்கு விற்கப்பபட்ட நிலையில் நேற்று, 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வாழை மரக்கன்று ஜோடி 50 - -100 ரூபாய்க்கும், பொரி கடலை கடைகளில், ஒரு படி பொரி, உடைத்த கடலை, அவல், நாட்டு சர்க்கரை அடங்கிய ஒரு பாக்கெட் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
பழங்களின் விலை கடந்த வாரத்தைவிட சற்று விலை உயர்ந்து இருந்தது. கடந்த வாரம் கிலோ 240 ரூபாயக்கு விற்ற, ஆப்பிள் நேற்று 280க்கும், கிலோ 40க்கு விற்கப்பட்ட வாழைப்பழம் 50 ரூபாய்க்கும், 100க்கு விற்கப்பட்ட சாத்துக்குடி 120 ரூபாய்க்கும், 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட கொய்யா 140 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதினர். அனைத்து வகை பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட இரு மடங்காக விலை உயர்ந்து இருந்தது.
அதன்படி, கடந்த வாரம் கிலோ 400க்கு விற்ற மல்லிகைப்பூ 800க்கும், 100க்கு விற்ற முல்லை, 500க்கும், 80க்கு விற்ற சாமந்தி, 250க்கும், 30க்கு விற்ற பன்னீர் ரோஜா 240க்கும் விற்கப்பட்டது.
கடந்த வாரம், 100 ரூபாய்க்கு விற்ற சம்பங்கி 300 ரூபாய்க்கும், 400க்கு விற்ற கனகாம்பரம் 800க்கும், 150க்கு விற்ற பெங்களூரு ரோஜா 400க்கும், 250க்கு விற்ற ஜாதி மல்லி, 500க்கும், 100க்கு விற்ற அலரி, 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.நென்னங்கீற்று தோரணம் 4 எண்ணிக்கை 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட், ஸ்டேஷனரி மற்றும் சீசன் நேர கடைகளில், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைக்கு தேவையான அலங்காரப் பொருட்களான பிளாஸ்டிக் மாலைகள் 65 - 550 ரூபாய் வரையிலும், அலங்கார தோரணங்கள் 150 - 900 ரூபாய் வரையிலும் விற்கப்படுகின்றன. அலங்கார டூம் 15 - 850 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
வீட்டு நுழைவாயிலில் பொருத்துவதற்காக படிகார கல், சங்குடன் கூடிய திருஷ்டி கறுப்பு கயிறு 100 - 200 ரூபாய் வரை விற்கப்பட்டது.