/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை செயலிழக்கும் பாதாள சாக்கடை திட்டம்
/
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை செயலிழக்கும் பாதாள சாக்கடை திட்டம்
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை செயலிழக்கும் பாதாள சாக்கடை திட்டம்
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் பிரச்னை செயலிழக்கும் பாதாள சாக்கடை திட்டம்
ADDED : அக் 21, 2024 02:05 AM

காஞ்சிபுரம்;காஞ்சிபுரம் மாநகராட்சியில், 51 வார்டுகள் உள்ளன. இதில், 40 வார்டுகளுக்கு, 1975ம் ஆண்டே பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. புதிதாக இணைக்கப்பட்ட நத்தப்பேட்டை, தேனம்பாக்கம், ஓரிக்கை, செவிலிமேடு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள், 300 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டுள்ளன.
ஆனால், ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ள 40 வார்டுகளில், பெரும்பாலான தெருக்களில், பாதாள சாக்கடை பிரச்னை, நகரவாசிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
நகரவாசிகளுக்கு மட்டுமல்லாமல், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அடைப்பு நீக்கும் தொழிலாளர்களுக்கும், கவுன்சிலர்களுக்கும் தலையாய பிரச்னையாக உள்ளது.
மழைக்காலம் வந்துவிட்டாலே, ரங்கசாமி குளம், உலகளந்த பெருமாள் கோவில், மூங்கில் மண்டபம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, பிள்ளையார்பாளையம், வேகவதி ரோடு உள்ளிட்ட தெருக்களில், வெள்ளம் போல கழிவுநீர் ஓடுகிறது.
துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் சூப்பர் சக்கர் வாகனத்தை, மாநகராட்சி அதிகாரிகள் கொண்டு வந்து அடைப்பு நீக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், மாநகராட்சி முழுதும் உள்ள இப்பிரச்னையை முழுமையாக சரி செய்ய முடியவில்லை.
மேன்ஹோல்களில் அடைப்பு ஏற்பட்டு, வீடுகளில் கழிவுநீர் கொப்பளித்து வெளியேறுகிறது. சமீப நாட்களில் பிள்ளையார்பாளையம் பகுதியில் உள்ள பலரது வீடுகளில் கழிவுநீர் பின்னோக்கி சென்று, வீடுகளுக்குள் புகுந்தது.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், பாதாள சாக்கடை திட்டம் துவங்கி, 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. குழாய்களில் கழிவுநீர் அழுத்தமாக செல்கிறது. இத்திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கிறது.
மாநகராட்சியில் குடியிருப்புகளின் எண்ணிக்கையும், பாதாள சாக்கடை இணைப்பும் அதிகமானதால், கழிவுநீர் செல்லும் குழாய்கள் அவற்றை வெளியேற்ற முடியாத சிக்கல் நிலவுகிறது.
அதேபோல, வணிக ரீதியிலான கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வடிகட்டி அதன் உரிமையாளர்கள் அனுப்புவதில்லை. நேரடியாக கழிவுநீரை அனுப்புவதால், மேன்ஹோல் எனப்படும் ஆள் இறங்கும் கழிவுநீர் தொட்டியில் மணல் நிரம்பி, அடைப்பு ஏற்படுகிறது.
மிக பழமையான இந்த பாதாள சாக்கடை திட்டத்தால் அன்றாடம் வரும் ஏராளமான புகார்களால், மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.