தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ பாலாற்று கிணறுகளும் வறண்டதால் காஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு!ஆழப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்

பாலாற்று கிணறுகளும் வறண்டதால் காஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு!ஆழப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்

பாலாற்று கிணறுகளும் வறண்டதால் காஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு!ஆழப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம்


UPDATED : ஜூலை 13, 2026 10:59 PM

ADDED : ஜூலை 13, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 13, 2026 10:59 PM ADDED : ஜூலை 13, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காஞ்சிபுரம்:மக்களின் தாகம் தீர்க்க, பாலாற்று படுகையில் நிலத்தடி நீர் குறைந்து வருவதால், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் கிணறுகள் வறண்டு விட்டன. இதனால், காஞ்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் திண்டாடி வருகின்றனர். நிலைமையை சமாளிக்க, பாலாற்றில் உள்ள கிணறுகளை மேலும் ஆழப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. உத்திரமேரூர் பாலாற்று படுகையில், புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஆதாரங்களாக, ராணிப்பேட்டை அருகே உள்ள திருப்பாற்கடல் பாலாறு, காஞ்சிபுரம் ஓரிக்கை பாலாறு ஆகிய இரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறுகள் முக்கிய பங்காற்றி வருகின்றன.

இதில், காஞ்சிபுரம் அருகே உள்ள பாலாற்றில் உள்ள, ஆறு கிணறுகளில், ஐந்து கிணறுகள் வறண்டுவிட்டதால், மாநகராட்சியின் பல பகுதிகளில், 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, 45, 46, 47, 48, 49 மற்றும் 50வது வார்டுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளுக்கு, பாலாற்றின் மணற்படுகையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழம் கொண்ட கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிப்பு நிலையங்கள் வழியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் கோடை காலத்தின் இறுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கமும், போதிய மழையின்மை காரணமாக நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆறு கிணறுகளில், தற்போது ஒரு கிணற்றில் இருந்து மட்டுமே நீர் கிடைக்கிறது. மீதமுள்ள ஐந்து கிணறுகளில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து, தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தினமும் இரண்டு மணி நேரம் வரை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது, அரை மணி நேரம் கூட சீராக தண்ணீர் வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

பல இடங்களில் குறைந்த அழுத்தத்தில் தண்ணீர் வருவதால், தெருவின் தொடக்கப் பகுதியில் உள்ள வீடுகளுக்கே ஓரளவு தண்ணீர் கிடைக்கிறது. கடைசி பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெறும் குழாய்களை பார்த்தபடியே திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

ஒரு மாதமாக இந்த பாதிப்பு நீடித்து வருவதால், பொதுமக்கள் தனியார் குடிநீர் லாரிகளை நாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார வசதி இல்லாத குடும்பங்கள் மற்ற பகுதிகளில் இருந்து குடிநீரை சுமந்து வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதனால் பெண்கள், முதியவர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி பணிகள் குழு தலைவரும், 48வது வார்டு தி.மு.க., கவுன்சிலருமான கார்த்தி கூறியதாவது:

குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக பல நாட்களாக நான் கூறி வருகிறேன். அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்வதாக இல்லை. குடிநீர் பிரச்னைக்கு, அவசர பணியாக கருதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க சொன்னால், தீர்மானம் நிறைவேற்றிய பின், நிதி ஒதுக்கி பணி செய்வதாக கூறுகின்றனர். குடிநீருக்கான பணி அவசரமானது என்ற புரிதல் அதிகாரிகளுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்த, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''வறட்சி காரணமாக கிணற்றில் தண்ணீர் குறைந்து விட்டது. கிணற்றில் உள்ள மோட்டார்களை மேலும் ஆழத்தில் இறக்க உள்ளோம். பல அடி ஆழத்திற்கு துார் வார போகிறோம். குடிநீர் பிரச்னை விரைவில் சரியாகும்,'' என்றார்.

ஊராட்சிகளும் திண்டாட்டம்

உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்கூடல், பழவேரி, பினாயூர், அரும்புலியூர், குருமஞ்சேரி, சாத்தணஞ்சேரி, களியப்பேட்டை, காவூர் போன்ற ஊராட்சிகள் பாலாற்றங்கரையையொட்டி உள்ளன. இந்த கிராமங்களுக்கு பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கோடை வெயில் காரணமாக, பாலாற்றில் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால், கிராமங்களுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஆழ்த்துளை கிணறுகளின் நீர் ஊற்றுகள் வற்றி வருகின்றன.

இவ்வாறு, திருமுக்கூடல், பழவேரி, சிறுதாமூர், அரும்புலியூர் ஆகிய ஊராட்சிகளுக்கான பாலாற்று படுகை வற்றியுள்ளன.

இதையடுத்து, அத்தகைய ஊராட்சியின் பாலாற்று படுகையில் நீர் ஊற்றுகள் உள்ள இடம் கண்டறிந்து புதிய ஆழ்த்துளை கிணறுகள் அமைக்கும் பணியில் ஊராட்சி நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன.

கோடை தாக்கம் தீவிரமாக இருந்த காரணத்தால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

-------------நான்கு மாதங்களில், சரிந்த நிலத்தடி நீர் மட்டம் விபரம் மாதம் நிலத்தடி நீர்மட்டம் (அடியில்) மார்ச 10.69 ஏப்ரல் 11.05 மே 12.00 ஜூன் 13.3



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us