/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
புதிய பஸ் நிலையத்திற்கான மண் பரிசோதனை நிறைவு விரைவில் 'டெண்டர்' பணி துவக்க நடவடிக்கை
/
புதிய பஸ் நிலையத்திற்கான மண் பரிசோதனை நிறைவு விரைவில் 'டெண்டர்' பணி துவக்க நடவடிக்கை
புதிய பஸ் நிலையத்திற்கான மண் பரிசோதனை நிறைவு விரைவில் 'டெண்டர்' பணி துவக்க நடவடிக்கை
புதிய பஸ் நிலையத்திற்கான மண் பரிசோதனை நிறைவு விரைவில் 'டெண்டர்' பணி துவக்க நடவடிக்கை
ADDED : ஜன 28, 2025 11:43 PM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் நகரின் மையப்பகுதியில், 50 ஆண்டுகளுக்கு முன், 7 ஏக்கரில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையம், தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இங்கு, சராசரியாக ஒரு நாளைக்கு, 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன.
பேருந்து நிலையம் உள்ளேயே பேருந்து டிப்போ, கடைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால், இடநெருக்கடி அதிகரித்தது. மேலும், பேருந்துகள் நகருக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, ரெட்டை மண்டலம், ராஜவீதிகள், காமராஜர் சாலை போன்ற இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், தர்மபுரி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களுக்கு பேருந்து வசதியின்றி உள்ளது. இதனால், சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டிய தேவை, 10 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டது.
இதனால், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் அமைக்க, 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த இடம் கைவிடப்பட்டது.
வெள்ளைகேட் அருகே தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடம் பார்க்கப்பட்டது. அதன்பின், அண்ணா பல்கலை அருகே தனியாருக்கு சொந்தமான இடம் பற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது.
ஆனால், 26 கோடி ரூபாய் கொடுத்து, தனியாரிடம் இருந்து இடத்தை பெற அரசு தயங்கியதால், அந்த இடமும் கைவிடப்பட்டது. இறுதியாக, பொன்னேரிக்கரையில் கட்டி வரும் உயர்மட்ட பாலம் அருகே உள்ள அரசுக்கு சொந்தமான இடம் பற்றி, மாவட்ட அதிகாரிகள் ஆலோசித்து, அந்த இடத்தை தற்போது உறுதி செய்துள்ளனர்.
அங்குள்ள 19 ஏக்கர் இடத்தில் பேருந்து நிலையம் அமைத்து கொள்ள, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த இடம் மாநகராட்சி வசம் வந்துள்ளது. இடத்தை பாதுகாக்க வேலி அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, பேருந்து நிலையம் அமைப்பதற்கான பணிகள் வேகமெடுத்துள்ளன. அரசு சார்பில் ஏற்கனவே 38 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் 'டெண்டர்' பணிகள் துவங்கும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி கூறியதாவது:
பேருந்து நிலையம், மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கிய உத்தரவுகள், கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வந்துவிட்டன. கட்டுமான பணிகள் துவக்குவதற்கு முன், மண் பரிசோதனையும் முடிந்துவிட்டது.
பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் குறித்து, தனியார் ஆலோசகர் நிறுவனத்திடம் அறிக்கை கேட்டுள்ளோம். அவர்கள் அறிக்கையை அளித்தவுடன், நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு, கட்டுமானம் பற்றிய அறிக்கை அளித்துவிடுவோம்.
இதை தொடர்ந்து, டி.பி.ஆர்., எனப்படும் விரிவான திட்ட அறிக்கை எங்களுக்கு கிடைக்கும். இதையடுத்து டெண்டர் விடப்பட்டு, உடனடியாக பணிகளை துவக்குவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.