ADDED : டிச 03, 2025 06:58 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியில், மாமியாரை சுத்தியால் அடித்து கொன்ற வழக்கில், மருமகனை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம், திருக்காலிமேடு பகுதியில் உள்ள அருந்ததியர் நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன், 54. இவர், ராஜாஜி மார்க்கெட்டில் உள்ள கழிப்பறை கட்டடத்தில் டோக்கன் வழங்கும் வேலை செய்து வந்தார்.
இவருக்கு, மனைவி சந்தவள்ளி, 48, மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். தினமும் மது குடித்துவிட்டு, வீட்டில் தகராறு செய்வதை லட்சுமணன் வாடிக்கையாக செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், மது குடித்துவிட்டு நேற்று முன்தினம் மதியம், வீட்டில் உள்ளவர்களிடம் லட்சுமணன் தகராறு செய்துள்ளார். அப்போது, லட்சுமணனை மனைவி சந்தவள்ளி மற்றும் மாமியார் திலகம், 70, ஆகியோர் தட்டி கேட்டுள்ளனர்.
இதனால், ஆத்திரமடைந்த லட்சுமணன், வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து, மாமியார் மற்றும் மனைவி ஆகிய இருவரையும், முகம், கன்னம் உள்ளிட்ட இடங்களில் அடித்துள்ளார்.
இதில், மாமியார் திலகம் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது மனைவி சந்தவள்ளி, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய லட்சுமணனை, ஸ்ரீபெரும்புதுார் அருகே போலீசார் பிடித்துள்ளனர். கொலை வழக்கு பதிவு செய்த காஞ்சி தாலுகா போலீசார், லட்சுமணனை கைது செய்து வேலுார் சிறையில் அடைத்தனர்.

