/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஸ்ரீபெரும்புதுாரில் 7 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலைசெய்தது அம்பலம் 'சிவப்பு' துண்டால் சிக்கிய குற்றவாளி
/
ஸ்ரீபெரும்புதுாரில் 7 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலைசெய்தது அம்பலம் 'சிவப்பு' துண்டால் சிக்கிய குற்றவாளி
ஸ்ரீபெரும்புதுாரில் 7 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலைசெய்தது அம்பலம் 'சிவப்பு' துண்டால் சிக்கிய குற்றவாளி
ஸ்ரீபெரும்புதுாரில் 7 கிராம் நகைக்காக மூதாட்டியை கொலைசெய்தது அம்பலம் 'சிவப்பு' துண்டால் சிக்கிய குற்றவாளி
ADDED : நவ 21, 2025 01:38 AM

ஸ்ரீபெரும்புதுார்: சுங்குவார்சத்திரம் அருகே, காயங்களுடன் மூதாட்டி உடல் மீட்கப்பட்ட வழக்கில், 7 கிராம் நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது. கொலை நடந்த இடத்தில் கிடந்த சிவப்பு துண்டால், கொலையாளி சிக்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் அருகே, சேந்தமங்கலம் கிராமத்தைச் சேரந்தவர் ராணி, 70. கணவர் உயிரிழந்ததை அடுத்து தனியாக வசித்து வந்த இவர், அப்பகுதியில் சுண்டல் வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில், இம்மாதம் 13ம் தேதி காலை, சேந்தமங்கலம் அருகே, சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலையோரம், முகத்தில் காயங்களுடன் மூதாட்டி உயிரிழந்து கிடந்தார்.
சுங்குவார்சத்திரம் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு, விசாரணையை துவக்கினர்.
முகத்தில் காயங்கள் இருந்ததாலும், மூதாட்டியின் காது மற்றும் மூக்கில் அணிந்திருந்த தங்க நகைகள் திருடப்பட்டு இருந்ததாலும், நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என, போலீசார் சந்தேகித்தனர்.
இந்நிலையில், மூதாட்டியின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் சிகப்பு துண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதை வைத்து விசாரணையை துவக்கியதில், போலீசாருக்கு துப்புகள் கிடைத்தன.
அந்த சிவப்பு துண்டை அணிந்திருந்த நபர், நவ. 4ம் தேதி இரவு, மூதாட்டி ராணியை, தன் இருசக்கர வாகனத்தில் ஏறச் சொல்லி, மிரட்டியதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அந்த நபர் குறித்து விசாரித்தபோது, பாப்பாங்குழி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பதும், வல்லம் வடகால் சிப்காட்டில் உள்ள தனியார் கேன்டீனில் ஓட்டுநர் வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அவரை, சிப்காட்டில் வைத்து, போலீசார் நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கொலை குறித்து, போலீசார் கூறியதாவது:
முருகனுக்கு கடன் பிரச்னை இருந்துள்ளது. இந்நிலையில், காது மற்றும் மூக்கில் தங்க நகையுடன் இரவு நேரத்தில் தனியாக நடந்து செல்லும் மூதாட்டி ராணியின் நகைகளை பறிக்க திட்டமிட்டுள்ளார். மூதாட்டிக்கு உறவினர் யாரும் இல்லாததால், எந்த பாதிப்பும் வராது என எண்ணியுள்ளார்.
இதற்காக, நான்கு மாதங்களாக திட்டம் தீட்டி வந்துள்ளார். இம்மாதம், 4ம் தேதி, மூதாட்டியை தீர்த்து கட்ட முடிவெடுத்து, அவரது இருசக்கர வாகனத்தில் ஏறச் சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். அன்று, இருசக்கர வாகனத்தில் மூதாட்டி ஏறாததால், அவர் தப்பினர்.
இதையடுத்து, 12ம் தேதி இரவு, தனியாக நடந்து சென்ற மூதாட்டியை, முருகன் வழிமறித்துள்ளார். பின் வாயை பொத்தி, சாலையோரம் உள்ள புதருக்குள் இழுத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, காது மற்றும் மூக்கில் இருந்த 7 கிராம் தங்க நகையை பறித்து அங்கிருந்து தப்பியுள்ளார். மறுநாள் அந்த நகைகளை, சுங்குவார்சத்திரத்தில் உள்ள சுகன் ஜுவல்லர்ஸ் கடையில் வைத்து, 52,000 ரூபாய் பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

