/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மழைநீர் கால்வாய் சேதம் சிறுமாங்காடில் அபாயம்
/
மழைநீர் கால்வாய் சேதம் சிறுமாங்காடில் அபாயம்
ADDED : பிப் 12, 2025 12:35 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே சிறுமாங்காடு ஊராட்சியில் சேதமான மழைநீர் வடிகால்வாயில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுமாங்காடு ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, கன்னியம்மன் கோவில் தெரு, மேட்டு தெரு, சந்தியம்மன் கோவில் தெரு என, அனைத்து தெருக்களிலும் மூடிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், சந்தியம்மன் கோவில் செல்லும் பிரதான சாலையில், மழைநீர் வடிகால் உடைந்து சேதமடைந்து உள்ளது. இதனால், அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர், எதிர்பாராத விதமாக சேதமான மழைநீர் வடிகாலில் விபத்தில் சிக்குகின்றனர்.
அதேபோல், சாலையில் குழந்தைகள் விளையாடும் போது, சேதமான மழைநீர் வடிகாலில் விழுந்து அசம்பாவிதம் எற்படும் அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.
இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள், சாலை நடுவே உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, சேதமடைந்த மழைநீர் வடிகாலை சீரமைக்க, சம்பதப்பட்ட ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.