/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவ --- மாணவியர் உள்ளூரில் தற்காலிக பள்ளி அமைக்க கோரிக்கை
/
ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவ --- மாணவியர் உள்ளூரில் தற்காலிக பள்ளி அமைக்க கோரிக்கை
ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவ --- மாணவியர் உள்ளூரில் தற்காலிக பள்ளி அமைக்க கோரிக்கை
ஆபத்தாக ஆற்றை கடக்கும் மாணவ --- மாணவியர் உள்ளூரில் தற்காலிக பள்ளி அமைக்க கோரிக்கை
ADDED : நவ 23, 2025 03:02 AM

வாலாஜாபாத்: இளையனார்வேலுார் சுற்றுவட்டார மாணவ --- மாணவியர், ஆபத்தான நிலையில் செய்யாற்றை கடந்து பள்ளிக்கு சென்று வருவதால் உள்ளூரில் தற்காலிக பள்ளி ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
உத்திரமேரூர் ஒன்றியம், நெய்யாடுவாக்கத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது. இப்பள்ளியில், வாலாஜாபாத் வட்டாரத்திற்கு உட்பட்ட இளையனார்வேலுார், சித்தாத்துார், வள்ளிமேடு மற்றும் காவாந்தண்டலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இக்கிராமங்களைச் சேர்ந்த மாணவ - மாணவியர், செய்யாற்று படுகையை கடந்துதான் நெய்யாடுவாக்கம் பள்ளிக்கு செல்லும் நிலை இருந்து வருகிறது.
இதனால், பருவ மழைக் காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில், நெய்யாடுவாக்கம் - இளையனார்வேலுார் இடையிலான ஆற்று வழிப் பயணம் தடைபடுவது வழக்கம்.
அச்சமயங்களில் மாணவ - மாணவியர் பள்ளிக்கு செல்ல இயலாத நிலை ஏற்படும். ஆற்றில் தண்ணீர் வேகம் குறைந்ததும் மீண்டும் மாணவர்கள் மற்றும் மக்கள் பயணிப்பர். இந்நிலையில், தற்போது நெய்யாடுவாக்கம் அரசு பள்ளிக்கு இளையனார்வேலுார் சுற்றி உள்ள மாணவ - மாணவியர் தினமும் செய்யாற்று தண்ணீரை கடந்து செல்கின்றனர்.
இதனால், ஆபத்தான நிலையில் பயணிக்கும் மாணவ - மாணவியர் நலன் கருதி உள்ளூரில் தற்காலிக பள்ளி ஏற்படுத்த இளையனார்வேலுார் பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, இளையனார்வேலுார் கிராம மக்கள் கூறியதாவது:
இளையனார்வேலுார் - நெய்யாடுவாக்கம் செய்யாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை ஏற்று தற்போது பொதுப்பணித்துறை சார்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், தற்போது ஆற்றில் நீரோட்டம் அதிகமாக உள்ள நிலையில் வேறு வழி இல்லாமல் ஆற்று நீரை கடந்து மாணவ - மாணவியர் பள்ளிக்கு செல்கின்றனர்.
தண்ணீரில் பள்ளம், மேடு தெரியாததால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
கடந்த ஆண்டில் செய்யாற்றில் வெள்ளப்பெறுக்கு காலத்தில் மாணவ - மாணவியர் நலன் கருதி இளையனார்வேலுார் ஊராட்சி சேவை மைய கட்டடத்தில் தற்காலிக பள்ளி துவங்கப்பட்டது.
எனவே, அம்முறையை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஆற்றில் நீரோட்டம் குறையும் வரை இளையனார்வேலுாரில் தற்காலிக பள்ளி இயக்க துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

