/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
ஆம்னி பஸ்களை கோயம்பேடில் இயக்க பேச்சு; வழியில் பயணியரை ஏற்றி, இறக்கவும் கோரிக்கை
/
ஆம்னி பஸ்களை கோயம்பேடில் இயக்க பேச்சு; வழியில் பயணியரை ஏற்றி, இறக்கவும் கோரிக்கை
ஆம்னி பஸ்களை கோயம்பேடில் இயக்க பேச்சு; வழியில் பயணியரை ஏற்றி, இறக்கவும் கோரிக்கை
ஆம்னி பஸ்களை கோயம்பேடில் இயக்க பேச்சு; வழியில் பயணியரை ஏற்றி, இறக்கவும் கோரிக்கை
ADDED : பிப் 04, 2024 05:58 AM
சென்னை : கிளாம்பாக்கத்தில் முழுமையான வசதிகள் செய்து கொடுக்கும் வரை, கோயம்பேடில் இருந்து இயக்கவும், சென்னை நகருக்குள் செல்லும் வழியில் பயணியரை ஏற்றி, இறக்கவும் ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர், அரசு தரப்புடன் நடத்திய கூட்டம் சுமூகமாக முடிந்தது. இரண்டு நாளில் முடிவுகள் தெரிவிக்கப்படும் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சென்னை நகரில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காண கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டது. டிச., 30ம் தேதி திறக்கப்பட்டு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளும் அதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன.
பேருந்துகளை நிறுத்துவது, பணிமனை, அலுவலகம் உட்பட பல வசதிகள் கிளாம்பாக்கத்தில் இல்லாததால், அங்கிருந்து இயக்குவதில் சிரமம் ஏற்படும் என, ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனாலும், கடந்த மாதம் 24ம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டன. கோயம்பேடுக்குள் நுழையவும், சென்னை நகரின் பகுதிகளில் இருந்து பயணியரை ஏற்றிச் செல்லவும், இறக்கிவிடவும் ஆம்னி பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
'கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி, நகருக்குள் பயணியருடன் ஆம்னி பேருந்துகளை இயக்கினால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, அரசு தரப்பில் கறாராக தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வட்டார போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டு, நகருக்குள் பயணியருடன் வந்த ஒன்பது ஆம்னி பேருந்துகளை சிறைபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து, இப்பிரச்னையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 'கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 77 ஆம்னி பேருந்துகளை இயக்க மட்டுமே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
முடிச்சூர் வரதராஜபுரத்தில், 5 ஏக்கரில் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் போதாது. அடுத்த 10 ஆண்டுகள் தேவையை கருத்தில் கொண்டு, 20 ஏக்கரில் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' உள்ளிட்ட பிரச்னைகளை நீதிமன்றத்தில் முன் வைத்தனர்.
இது குறித்து விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி தீர்வு காண அரசுக்கு அறிவுறுத்தியது. அத்துடன் சென்னையின் சில குறிப்பிட்ட பகுதிகளில் பயணியரை ஏற்றி, இறக்குவது குறித்தும் பரிசீலிக்கும் படி கூறியது.
இதன் தொடர்ச்சியாக, நேற்று, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், அதிகாரிகள் இடையே கூட்டம் நடந்தது.
சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம், விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன், கிளாம்பாக்கம் பேருந்து நிர்வாக அலுவலர் பார்த்தீபன் ஆகியோர் அரசு தரப்பில் இடம் பெற்றனர்.
ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் அன்பழகன், திருஞானம், அப்சல், மாறன் உள்ளிட்டோர் பேச்சில் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின், அன்பழகன் கூறியதாவது:
சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் ஆம்னி பேருந்துகளின் பணிமனைகள் உள்ளன. அங்கு வழக்கமான பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே பணிமனைகளில் தினமும் பராமரிப்பு முடிந்து, அங்கிருந்து இயக்கப்படும் பேருந்துகளில் பயணியரை ஏற்றிக் கொண்டு, சென்னை நகரின் வழியாக கிளாம்பாக்கம் செல்ல அனுமதிக்க வேண்டும்.
கோயம்பேடில் உள்ளதுபோல், கிளாம்பாக்கத்திலும் தரைதளத்தில் 100 அலுவலகங்கள், ஊர் வாரியாக நடைமேடை ஒதுக்குதல் போன்றவற்றை ஆம்னி பேருந்துகளுக்கு செய்து கொடுக்க வேண்டும்.
தென் மாவட்டங்களில் இருந்து வரும்போது கோயம்பேடில் பயணியரை இறக்கியபின், பணிமனைக்கு செல்லும் வழியில் நகர் பகுதிகளில் பயணியரை இறக்க அனுமதிக்க வேண்டும். திடீரென எல்லா பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டதால் பயணியர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்தோம்.
பகுதி, பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு ஆம்னி பேருந்துகளை மாற்ற கால அவகாசம் வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். எங்கள் கோரிக்கைகளை அதிகாரிகள் கவனத்துடன் கேட்டனர். பேச்சு சுமூகமாக முடிந்தது. இரண்டு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக, அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'நீதிமன்றம் உத்தரவின் படி, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதன் பின், முடிவெடுத்து அறிவிக்கப்படும்' என்றனர்.