/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு... 100 ஏக்கர் அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம்
/
மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு... 100 ஏக்கர் அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம்
மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு... 100 ஏக்கர் அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம்
மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு... 100 ஏக்கர் அனைத்து பருவங்களிலும் பயிரிடலாம்
ADDED : ஜூலை 14, 2025 10:58 PM

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, 100 ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீசன் இன்றி, அனைத்து பருவங்களிலும் சாகுபடி செய்து, விவசாயிகள் பயன்பெறலாம் என, வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், குன்றத்துார், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார் ஆகிய ஐந்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களின் கட்டுப்பாட்டில், 1.20 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன.
இதில், நெல், வேர்க்கடலை, கரும்பு, காய்கறி ஆகிய பல வித பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
நீர் பாசனத்திற்கு தண்ணீர் குறைவாக பயன்படுத்தப்படும் கம்பு, ராகி உள்ளிட்ட சிறு தானிய பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும் என, வேளாண் துறையினர் ஊக்குவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், ஆடு, மாடு, கோழி ஆகிய தீவன தயாரிப்பு மற்றும் சோள மாவு, எத்தனால் உள்ளிட்ட மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிக்க விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டி உள்ளது. இதற்கு, மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நுாறு ஏக்கர் பரப்பளவில், மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரசு மானியமாக 2.5 ஏக்கருக்கு 6,000 ரூபாய் வழங்கி, மக்காச்சோளம் சாகுபடி ஊக்குவித்து வருகிறது. மேலும், மக்காச்சோள விதைகள், திர உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளன.
இந்த மக்காச்சோள சாகுபடிக்கு, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு, 12.5 ஏக்கர்; படப்பை என, அழைக்கப்படும் குன்றத்துார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு, 5 ஏக்கர்; சிறுகாவேரிபாக்கம் என, அழைக்கப்படும் காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய மூன்று வட்டாரங்களுக்கு தலா, 27.5 ஏக்கர் என மொத்தம் 100 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.
அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக விவசாயிகள் தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் மூலமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி பரப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என, வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு கிருஷ்ணவேணி கூறியதாவது:
காஞ்சிபுரம் ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருப்பதால், அதிக விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறைந்த நீர் பாசனத்தை பயன்படுத்தி சிறு தானியங்களை சாகுபடி செய்ய வேண்டும் என, ஊக்குவித்து வருகிறோம். அதேபோல், மக்காச்சோளமும் சாகுபடி செய்ய வேண்டும் என, விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 100 ஏக்கர் இலக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு ஏற்ப பிரித்தளித்துள்ளோம். வேளாண் உதவி இயக்குநர்களும் விவசாயிகளை தேர்வு செய்யும் பணிகளை செய்து வருகின்றனர்.
மக்காச்சோளம் சாகுபடி பொறுத்தவரையில், குறிப்பிட்ட சீசனில் தான் சாகுபடி செய்ய வேண்டும் என கட்டாயம் இல்லாததால், விவசாயிகள் எப்போது வேண்டுமானாலும் சாகுபடி செய்யலாம் என, வேளாண் ஆராய்ச்சி வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அச்சம் இன்றி மக்காச்சோளம் சாகுபடி செய்து, அதிக வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

