/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
7 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை புலம்பும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள்
/
7 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை புலம்பும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள்
7 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை புலம்பும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள்
7 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை புலம்பும் தற்காலிக துப்புரவு பணியாளர்கள்
ADDED : மார் 25, 2025 07:52 AM
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 52 அரசு உயர் நிலைப் பள்ளி மற்றும், 50 மேல்நிலைப் பள்ளி என, மொத்தம், 102 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பள்ளிக்கும், தலா ஒரு இரவுக் காவலர், ஒரு அலுவலக உதவியாளர், ஒரு துப்புரவு பணியாளர் என, 306 பணியிடங்கள் உள்ளன.
இதில், காலை 6:00 மணி முதல், 8:00 மணி வரையில் துப்புரவு பணியாளர்கள் பள்ளி வளாகம் முழுதும் சுத்தம் செய்து, ஒவ்வொரு வகுப்பறை மற்றும் அலுவலக அறைகளில், தண்ணீரை பிடித்து வைக்க வேண்டும்.
அதேபோல, காலை 9:00 மணி அளவில், பள்ளி வளாகத்திற்கு வரும் அலுவலக உதவியாளர், அலுவலக பணி மற்றும் வகுப்பு துவங்குவதற்கு மணி அடிக்கும் வேலை செய்ய வேண்டும்.
பள்ளி முடிந்த பின், மாலை 6:00 மணி முதல், காலை 6:00 மணி வரையில், இரவுக் காவலர் பள்ளி வளாகத்தை பூட்டு போட்டு விட்டு, பள்ளி வளாகத்தில் இருக்கும் பொருட்களை பாதுகாப்பாக பாதுகாப்பது இரவுக் காவலர் பணியாகும்.
ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, பெரும்பாலான அரசு பள்ளிகளில், துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
இதனால், கண் துடைப்புக்காக பள்ளி மேலாண் குழுவினர் வாயிலாக, 3,000 ரூபாய் குறைந்த சம்பளம் நிர்ணயம் செய்து, துப்புரவு பணியாளர்களை நியமித்துக் கொள்ளலாம் என, கல்வித் துறை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி இருந்தது.
குறைந்த சம்பளம் இருப்பதால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் துப்புரவு பணிக்கு ஆட்கள் வருவதில்லை.
மேலும், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 102 துப்புரவு பணியாளர்கள், 80 அலுவலக உதவியாளர்கள், 90 இரவுக்காவலர்கள் என, மொத்தம், 272 காலி பணியிடங்கள் உள்ளன.
இதில், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் இருக்கும் பள்ளிகளில், கூடுதல் பொறுப்பு என, கல்வித்துறை நிர்வாகம் மாற்று பணிக்கு பரிந்துரை செய்து விடுகிறது.
பள்ளி மேலாண் குழுவினர் வாயிலாக நியமிக்கப்பட்ட தற்காலிக துப்புரவு ஊழியர்களுக்கு, ஏழு மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. நடப்பு நிதி ஆண்டு இந்த மார்ச் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
அதன்பின், தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை துவங்கும் போது, யாரிடம் சென்று சம்பளம் கேட்பது உள்ளிட்ட பல்வேறு புலம்பல்களை தற்காலிக துப்புரவு பணியாளர்கள் இடையே ஏற்படுத்தி உள்ளது.
இதே நிலைதான் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி துப்புரவு பணியாளர்களுக்கும் என, துப்புரவு பணி செய்யும் ஊழியர்கள் இடையே புலம்பலை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
ஏழு மாதங்களாக சம்பளம் வரவில்லை என, கல்வித் துறை நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளோம்.
மாவட்ட நிர்வாகமும், ஏதேனும் ஒரு நிதியில் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குங்கள் என, கூறுகின்றனர். எந்த ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர்களும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க செவி சாய்க்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.