/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பாலாறின் குறுக்கே பாலத்திற்கு இம்மாத இறுதியில் 'டெண்டர்' டிசம்பரில் பணிகள் துவங்க திட்டம்
/
பாலாறின் குறுக்கே பாலத்திற்கு இம்மாத இறுதியில் 'டெண்டர்' டிசம்பரில் பணிகள் துவங்க திட்டம்
பாலாறின் குறுக்கே பாலத்திற்கு இம்மாத இறுதியில் 'டெண்டர்' டிசம்பரில் பணிகள் துவங்க திட்டம்
பாலாறின் குறுக்கே பாலத்திற்கு இம்மாத இறுதியில் 'டெண்டர்' டிசம்பரில் பணிகள் துவங்க திட்டம்
ADDED : நவ 03, 2025 01:33 AM

காஞ்சிபுரம்:  வாலாஜாபாத் பாலாறின் குறுக்கே, 75 கோடி ரூபாய் செலவில் அமைக்க இருக்கும் பாலத்திற்கு, இம்மாத இறுதியில் டெண்டர் விடப்பட உள்ளது. டிசம்பரில், கட்டுமானப் பணிகள் துவக்க நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
வாலாஜாபாதில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக, அவளூர் கிராமத்திற்கு செல்லும் 1.2 கி.மீ., தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலத்தின் வழியாக சுற்றுவட்டார கிராம மக்கள், வாலாஜாபாத் வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
பாலாறில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, வாலாஜாபாத் - அவளூர் இடையே செல்லும் தரைப்பாலம் நீரில் மூழ்கி, வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடைபடும்.
இதுபோன்ற நேரங்களில், சுற்றுவட்டாரத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள், காஞ்சிபுரம், வாலாஜாபாத் வழியாக 30 கி.மீ., துாரம் சுற்றிக்கொண்டு தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
பேரிடர் காலங்களில். இதுபோல ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க, வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட தரைப்பாலம் கட்டித்தர வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
நெடுஞ்சாலைத் துறையினரே 1 கோடி, 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தற்காலிக சீரமைப்பு பணிகளை மட்டுமே செய்து வந்தனர்.
நிரந்தரமாக தீர்வு ஏற்படும் வகையில், உயர்மட்ட பாலம் வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்தனர். சட்டசபை கூட்டத் தொடரிலும் உத்திரமேரூர் தொகுதி தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் உயர்மட்ட தரைப்பாலம் வேண்டும் என, வலியுறுத்தி வந்தார்.
இதை ஏற்று, கடந்த ஆண்டு வாலாஜாபாத் - அவளூர் இடையே உயர்மட்ட தரைப்பாலத்திற்கு, மண் பரிசோதனைகள் செய்து, விரிவான திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசு ஒப்புதலுக்கு நெடுஞ்சாலைத் துறை அனுப்பி இருந்தது.
இதை ஏற்று, 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய உயர்மட்ட தரைப்பாலம் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் கட்டுமான பணிகளை நெடுஞ்சாலைத் துறை சிறப்பு திட்டப்பிரிவு செய்ய உள்ளது.இந்த உயர்மட்ட பாலப்பணி நிறைவு பெற்றால், பேரிடர் காலங்களில் 30 கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் அலைச்சல் இருக்காது என, நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
நெடுஞ்சாலைத் துறை சிறப்பு திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாலாஜாபாத் - அவளூர் இடையே, உயர்மட்ட தரைப்பாலம் கட்டுவதற்கு, 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதில், 15 மீட்டர் அகலம், 715 மீட்டர் நீளமுடைய உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பணிக்கு, கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்து, உறுதி தன்மை அறியப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பாலப் பணிக்கு, இம்மாதம் இறுதியில் டெண்டர் விடப்படும். பணிகள், டிசம்பரில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கனரக வாகனங்களால் சேதம்
வாலாஜாபாத், அவளூர், அங்கம்பாக்கம் ஆகிய கிராமங்களை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில், கல் அரவை நிலையங்கள் மற்றும் கல் குவாரிகள் இயங்கி வருகின்றன. கனரக லாரிகளால், தரைப்பாலத்தில் அடிக்கடி சேதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் விதமாக, உயர்மட்ட பாலம் அமைக்கும் போது, அதிக பளு தாங்கும் மேம்பாலம் அமைக்க வேண்டும்.
-வி.முருகன்,
அங்கம்பாக்கம், வாலாஜாபாத்.

