/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பருவமழை துவங்கி ஒரு மாதமாகியும் 60 சதவீதம் மட்டுமே நிரம்பிய தென்னேரி ஏரி
/
பருவமழை துவங்கி ஒரு மாதமாகியும் 60 சதவீதம் மட்டுமே நிரம்பிய தென்னேரி ஏரி
பருவமழை துவங்கி ஒரு மாதமாகியும் 60 சதவீதம் மட்டுமே நிரம்பிய தென்னேரி ஏரி
பருவமழை துவங்கி ஒரு மாதமாகியும் 60 சதவீதம் மட்டுமே நிரம்பிய தென்னேரி ஏரி
ADDED : நவ 10, 2025 01:07 AM

வாலாஜாபாத்: பருவமழை துவங்கி ஒரு மாதமாகியும் தென்னேரி ஏரி, 60 சதவீதம் மட்டும் நிரம்பி உள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.
வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்டது தென்னேரி கிராமத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஏரி உள்ளது. இந்த ஏரி, 18 அடி ஆழம் மற்றும் 5,345 ஏக்கர் பரப்பளவு கொண்டதாக உள்ளது.
ஏழு மதகுகள் கொண்ட இந்த ஏரி பருவ மழை காலத்தில், முழுமையாக நிரம்பினால், அத்தண்ணீரைக் கொண்டு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள 5,850 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
மேலும், ஏரி நிரம்பினால் அதன் உபரி நீர், 5 கலங்கல் வழியாக வெளியேற்றப்பட்டு வாரணவாசி, வேண்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி செங்கல்பட்டு மாவட்டம், நீஞ்சல்மேடு சென்று இறுதியாக கொலவாய் ஏரியில் கலக்கிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான பருவமழை கடந்த மாதம் துவங்கிய நிலையில் இதுவரை போதுமான மழை பெய்யாததால் ஏரி நிரம்பாமல் உள்ளது.
இதனால், நடப்பாண்டில் ஏரி முழு கொள்ளளவை எட்டுமா என, விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதுகுறித்து, நீர்வளத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
இதுவரை பெய்த மழைக்கு தென்னேரி ஏரி 13 அடி ஆழத்திற்கு நிரம்பி உள்ளது.
ஏரிக்கான வரத்து கால்வாய்கள் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் செய்து தயாராக உள்ளது.
இன்னும் பருவ மழைக்கான காலம் உள்ளதால், அடுத்தடுத்த மழைக்கு ஏரி நிரம்பக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

